தொழில்நுட்பம் , கண்டுபிடிப்புகளில் முன்னணி மாநிலமாக மாற்ற அழைப்பு
தொழில்நுட்பம் , கண்டுபிடிப்புகளில் முன்னணி மாநிலமாக மாற்ற அழைப்பு
ADDED : ஜூலை 13, 2024 04:27 AM

பெங்களூரு : ''தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் கர்நாடகாவை முன்னணி மாநிலமாக மாற்றுவோம்,'' என முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்தார்.
தொழில்நுட்ப பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் வகையிலும், கர்நாடக ஐ.டி., - பி.டி., துறை சார்பில், 26 ஆண்டுகளாக பெங்களூரில் தொழில்நுட்ப உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டு, நவம்பர் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்கள், பெங்களூரு அரண்மனையில், 27வது தொழில்நுட்ப உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான முன் ஏற்பாட்டின் ஒரு பகுதியாக, நகரின் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில், தொழில்நுட்ப வல்லுனர்களுடன் முதல்வர் சித்தராமையா நேற்று காலை சிற்றுண்டி சாப்பிட்டபடியே கலந்துரையாடினார்.
பின், அவர் பேசியதாவது:
சர்வதேச அளவில், தொழில்நுட்ப தலைநகராக இந்தியா உருவெடுக்கும் கனவு தொலைவில் இல்லை. இதை சாத்தியப்படுத்தும் வகையில், பெங்களூரு தொழில்நுட்ப மையமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நமது மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தொழில்நுட்ப துறை முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அரசு அறியும்.
8.2 சதவீதம்
புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி, முதலீட்டை ஊக்குவிக்கவும், நிலையான வளர்ச்சியை ஆதரிக்கும் சூழலை உருவாக்கவும் அரசு தயாராக உள்ளது. நாட்டின் நான்காவது பெரிய மாநிலமான கர்நாடகா, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.2 சதவீதம் பங்களிப்பை வழங்குகிறது.
துறை சார்ந்த கொள்கைகள், 'ஸ்டார்ட் அப்'கள், சிறு, குறு தொழில்கள், பெரிய நிறுவனங்களை ஒரே மாதிரியாக மேம்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பெங்களூரு நகரம், முதலீட்டாளர்களின் புகலிடமாக உள்ளது.
பெங்களூரு நகருக்கு அப்பால் உள்ள பகுதிகளில் பெரிய நிறுவனங்கள் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் வகையில், கட்டுப்பாடுகளை தளர்த்தும் வகையில் புதிய கொள்கை உருவாக்கப்படுகிறது.
டிஜிட்டல் பரிணாமம்
செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், இன்டர்நெட் ஆப் திங்ஸ், பிளாக்செயின், குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகியவை நமது டிஜிட்டல் பரிணாமத்தின் அடுத்த கட்ட பாதையாகும். பெங்களூரு மற்றும் கர்நாடகா முன்னணியில் இருப்பதை உறுதி செய்வதற்காக தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது.
இங்கு இருக்கும் தொழில் அதிபர்களுக்கு, கர்நாடக அரசுடன் ஒத்துழைக்க அழைப்பு விடுக்கிறேன். வலுவான உள்கட்டமைப்பு, திறமையான பணியாளர்கள் மற்றும் வளர்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும் ஒரு ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்க ஒன்றாக வேலை செய்வோம்.
உங்கள் நிபுணத்துவம், எங்கள் அர்ப்பணிப்பு இரண்டும் இணைந்து, சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும். இந்த ஆண்டின் பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டின் மையமாக, 'எல்லைகளை உடைத்தல்' என்ற தத்துவத்துடன் இயங்கும்.
உங்களின் தொலைநோக்கு பார்வையும், தலைமைத்துவமும் பெங்களூரை உலக அரங்கில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் தொடர்ந்து பெரிய கனவுகளை காண்போம்; ஒன்றிணைந்து செயல்படுவோம்.
தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் கர்நாடகாவை மறக்க முடியாத முன்னணி மாநிலமாக மாற்றுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
துணை முதல்வர் சிவகுமார், ஐ.டி., - பி.டி., துறை அமைச்சர் பிரியங்க் கார்கே மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

