ADDED : ஏப் 14, 2024 06:23 AM
புதுடில்லி : தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சி களுக்கு கோடிகளை வாரி வழங்கிய, 'மேகா இன்ஜினியரிங் அண்டு இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்' நிறுவனம் மீது, லஞ்ச வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானாவின் ஹைதராபாத்தை தலைமையிடமாக வைத்து செயல்படும் மேகா இன்ஜினியரிங் அண்டு இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனம், தற்போது ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் வாயிலாக, 966 கோடி ரூபாயை நன்கொடையாக அரசியல் கட்சிகளுக்கு ஏற்கனவே வழங்கி உள்ளது.
இதில் மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு மட்டும், 586 கோடி ரூபாயை அந்நிறுவனம் வழங்கி உள்ளது.
இந்நிலையில், சத்தீஸ்கரின் ஜக்தல்பூர் ஒருங்கிணைந்த எக்கு ஆலை பணிகள் தொடர்பாக, மேகா இன்ஜினியரிங் நிறுவனத்தின், 174 கோடி ரூபாய் கட்டணங்களுக்கு ஒப்புதல் பெறுவதற்கு, 78 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, சில நிறுவனங்களைச் சேர்ந்த 10 அதிகாரிகள் மீது சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக, 2023 ஆக., 10ல், முதற்கட்ட விசாரணையை சி.பி.ஐ., பதிவுசெய்தது.
இந்நிலையில், கடந்த மார்ச் 31ம் தேதி, மேகா இன்ஜினியரிங் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்துள்ளது. இத்தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

