முன்னாள் முதல்வர் ஜெகன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு
முன்னாள் முதல்வர் ஜெகன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு
ADDED : ஜூலை 13, 2024 12:59 AM
குண்டூர்: ஆந்திராவில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.,வின் புகாரைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, இரு மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் மீது, போலீசார் கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்றார்.
அக்கட்சி சார்பில் உண்டி தொகுதியில் போட்டியிட்ட ரகுராமகிருஷ்ண ராஜு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார்.
அவதுாறு
இவர் சமீபத்தில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி, இரு மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள், இரு ஓய்வு பெற்ற அதிகாரிகள் என ஐந்து பேர் மீது போலீசில் புகார் அளித்திருந்தார்.
அதன் விபரம்:
கடந்த 2021ல் கொரோனா இரண்டாவது அலை பரவலின் போது, அப்போது முதல்வராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டி குறித்து அவதுாறாக பேசியதாக என்னை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
எந்தவித ஆவணங்களுமின்றி கைது செய்த என்னை, போலீசார் கொடூரமாக தாக்கினர். எனக்கு இதயநோய் அறுவை சிகிச்சை செய்துள்ளதாகக் கூறியும், அதற்கான மருத்துவ உதவி எதுவும் தரப்படவில்லை.
மருத்துவ பரிசோதனைக்காக குண்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கிருந்த டாக்டர்கள், போலீசார் என்னை தாக்கியதை மறைத்து, நான் நலமுடன் உள்ளதாக பொய் அறிக்கை அளித்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, ஒரு வாரத்துக்குப் பின் எனக்கு ஜாமின் தரப்பட்டது.
நடவடிக்கை
என்னை கைது செய்து கொடுமைப்படுத்திய அப்போதைய சி.பி.சி.ஐ.டி., போலீஸ் தலைவர் சுனில் குமார், ஏ.எஸ்.பி., விஜய் பால், அப்போதைய உளவுப்பிரிவு தலைவர் சீதாராம் ஆஞ்சநேயலு, குண்டூர் அரசு மருத்துவமனையின் அப்போதைய மருத்துவ கண்காணிப்பாளர் பிரபாவதி மற்றும் முதல்வராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இதன் அடிப்படையில், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உட்பட ஐந்து பேர் மீது, குண்டூர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று கொலைமுயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், விஜய் பால் மற்றும் பிரபாவதி ஆகியோர் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.