ADDED : ஜூன் 09, 2024 03:12 AM

பாகல்கோட் ; தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றி பெற்ற கத்தி கவுடருக்கு, மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இம்முறை லோக்சபா தேர்தலில், பாகல்கோட் தொகுதி சீட்டுக்கு, பலர் போட்டி போட்டனர். இறுதியில் இன்னாள் எம்.பி., கத்தி கவுடருக்கே, பா.ஜ., மேலிடம் மீண்டும் சீட் கொடுத்தது. கட்சி எதிர்பார்த்ததை போன்று, அவரும் வெற்றி பெற்று எம்.பி.,யானார்.
தொடர்ந்து ஐந்தாவது முறை வெற்றி பெற்றதால், பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில், கத்தி கவுடருக்கு இடம் கிடைக்கும் என, ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தேர்தலுக்கு முன்பு பிரசாரம் செய்த, பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், 'இம்முறை கத்திகவுடர் வெற்றி பெற்றால், மத்திய அமைச்சர் ஆவார்' என கூறியிருந்தார். அப்போது அவருடன் இருந்த ஜெகதீஷ் ஷெட்டரிடம், 'நீங்கள் அமைச்சராகாமல், கத்தி கவுடருக்கு வாய்ப்பு அளியுங்கள்' என, வேண்டுகோள் விடுத்தார்.
கர்நாடகாவில் இருந்து, தொடர்ந்து ஐந்து முறை வெற்றி பெற்றுள்ள எம்.பி.,க்களின் எண்ணிக்கை, மிகவும் குறைவு.
லிங்காயத் சமுதாயத்தினருக்கு கொடுக்க மேலிடம் முடிவு செய்தால், கத்தி கவுடருக்கு வாய்ப்பு கிடைக்கும். ஏனென்றால் இம்முறை வெற்றி பெற்றவர்களில், இவரே மூத்தவர்.
பெலகாவியில் ஜெகதீஷ் ஷெட்டர், ஹாவேரியில் பசவராஜ் பொம்மை, துமகூரு தொகுதியில் சோமண்ணா வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் முதன்முறையாக எம்.பி., ஆனவர்கள். ஷெட்டர், பொம்மை மாநில முதல்வராக இருந்துள்ளார். சோமண்ணா அமைச்சராக பதவி வகித்தார்.
ஷிவமொகாவில் நான்காவது முறையாக, ராகவேந்திரா வெற்றி பெற்றுள்ளார். இவரது தம்பி விஜயேந்திரா மாநில தலைவராக உள்ளார். ஒரே குடும்பத்தில் இன்னொருவருக்கு வாய்ப்பு கிடைக்காது. எனவே கத்தி கவுடருக்கு, மத்திய அமைச்சராகும் அதிர்ஷ்டம் கிடைக்கலாம்.