தங்க அம்பாரி ஊர்வலத்தை காண அரண்மனை வளாகத்தில் மாற்றம்
தங்க அம்பாரி ஊர்வலத்தை காண அரண்மனை வளாகத்தில் மாற்றம்
ADDED : செப் 07, 2024 07:40 AM

மைசூரு: தங்க அம்பாரி ஊர்வலத்தை பார்வையாளர்கள் நன்கு காண்பதற்கு வசதியாக அரண்மனை வளாகத்தில் மாற்றம் செய்வது குறித்து போலீசாருடன் நேற்று அமைச்சர் மஹாதேவப்பா ஆலோசனை நடத்தினார்.
இரண்டாம் கட்டமாக வந்த ஐந்து தசரா யானைகளுக்கு நேற்று எடை பரிசோதிக்கப்பட்டது.
மைசூரு தசரா விழாவுக்கு முதல்கட்டமாக கடந்த ஆகஸ்ட் மாதம் அபிமன்யு தலைமையில் ஒன்பது யானைகள் வந்தன. அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக பிரசாந்த், சுக்ரீவா, ஹிரண்யா, லட்சுமி, மஹீந்திரா ஆகிய ஐந்து யானைகள் நேற்று முன்தினம் காட்டில் இருந்து மைசூருக்கு லாரியில் அழைத்து வரப்பட்டன.
அரண்மனைக்கு வந்ததும், அவை ஊற்றி குளிப்பாட்டப்பட்டன.
நேற்று காலை அரண்மனை வளாகத்தில் இருந்து ஊர்வலமாக ஒன்பது யானைகள் அழைத்து வரப்பட்டன.
இரண்டாவது கட்டமாக வந்த ஐந்து யானைகளுக்கு தன்வந்த்ரி சாலையில் உள்ள லாரிகளின் லோடு எடை கணக்கிடும் கருவியில் யானைகளின் எடை பரிசோதிக்கப்பட்டன.
இவற்றில், சுக்ரீவன் 5,190 கிலோ; பிரசாந்த் 4,875 கிலோ; மஹீந்திரா 4,910 கிலோ; லட்சுமி 3,485 கிலோ; ஹிரண்யா 2930 கிலோ எடை இருந்தன.
அபிமன்யுவுக்கு அடுத்தபடியாக அதிக எடை கொண்டதாக சுக்ரீவன் யானை இருந்தது.
மைசூரு தசராவின் நிறைவு நாளில், அரண்மனை வளாகத்தில் இருந்து பன்னிமண்டபம் வரை 750 கிலோ தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு தலைமையில் யானைகள் ஊர்வலம் இடம் பெறும்.
இந்த ஊர்வலத்தை பார்க்க, அரண்மனை வளாகத்தில் வராஹ சுவாமி, காயத்ரி தேவி, திரினேஸ்வரி கோவில் அருகில் இருக்கை ஏற்பாடுகள் செய்யப்படும்.
இதற்காக ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாஸ் மற்றும் டிக்கெட் விற்பனை செய்யப்படும்.
ஆனால், யானைகளை சுற்றிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், யானைகள் சரிவர தெரிவதில்லை என்று சுற்றுலா பார்வையாளர்களிடம் இருந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா தலைமையில் போலீஸ் உயர் அதிகாரிகள், அரண்மனை வளாகத்தில் பார்வையிட்டனர்.
பின், பார்வையாளர் மேடையை, யானைகள் நடந்து செல்லும் பாதையின் அருகில் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
பின், அரண்மனை வளாகத்தில் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த யானை பாகன்களின் மகன்களுடன், அமைச்சர் மஹாதேவப்பா சிறிது நேரம் விளையாடினார். அவர்களின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
அனைத்து யானைகளுக்கும் காலை, மாலையில் என இருவேளையிலும் நடைப்பயிற்சி மேற்கொண்டன. நாளை (இன்று) விநாயகர் சதுர்த்தி என்பதால் அரண்மனை வளாகத்தில் 14 யானைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
பிரபு கவுடா,
வனத்துறை அதிகாரி.
� தசராவில் பங்கேற்கும் யானைகள் நடைப்பயிற்சி மேற்கொண்டன. � அரண்மனை வளாகத்தில் போலீசாருடன், அமைச்சர் மஹாதேவப்பா ஆய்வு செய்தார். இடம்: மைசூரு.