ADDED : மே 09, 2024 05:30 AM

பெங்களூரு : லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், அரசியல் பரபரப்பில் இருந்து ஒதுங்கி, குடும்பத்துடன் தலைவர்கள், வேட்பாளர்கள் 'ஹாயாக' பொழுதுபோக்கினார்.
கர்நாடகாவில் லோக்சபா தேர்தல், ஏப்ரல் 26ல், மே 7ல் என, இரண்டாம் கட்டங்களாக நடந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் 16ம் தேதி முதலே, தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தன.
தேர்தலுக்காக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், இரண்டு மாதங்களாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும், தலைவர்களும் துாக்கம், ஓய்வு இன்றி, இரவு, பகலமாக தொகுதிகளை சுற்றி வந்தனர்.
வாக்காளர்களின் மனதில் இடம் பிடித்து, எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று கால்களில் சக்கரத்தை கட்டிக் கொண்டு வேட்பாளர்கள் செயல்பட்டனர்.
தற்போது, தேர்தல் முடிந்த நிலையில் அனைவரும் ஓய்வில் உள்ளனர். முதல்வர் சித்தராமையா, தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு நேற்று முன்தினமே சென்று ஓய்வெடுத்து வருகிறார். துணை முதல்வர் சிவகுமார், அவரது தம்பியும், பெங்., ரூரல் காங்., வேட்பாளருமான சுரேஷ் ஆகிய இருவரும், சிக்கமகளூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கி உள்ளனர்.
மத்திய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சரும், தார்வாட் பா.ஜ., வேட்பாளருமான பிரஹலாத் ஜோஷி, தன் ஹூப்பள்ளி வீட்டில் குடும்பத்தினருடன் பொழுதுபோக்கி வருகிறார். பேத்தியுடன் விளையாடி காலம் கழித்தார்.
இதற்கிடையில், உத்தர கன்னடா பா.ஜ., வேட்பாளர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி, தன் கிராமத்தில் உள்ள தன் இல்லத்தில், தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சினார். வீட்டு வளாகத்தில் உள்ள கிளி உட்பட, பல்வேறு பறவைகளுக்கு தீவனம் போட்டார்.
கொட்டகையில் கட்டப்பட்டிருந்த பசுக்களுக்கு தீவனம் கொடுத்தார். அதன் பின், தோட்டத்தில் நடக்கும் பணிகளை பார்வையிட்டார். இப்படி பல தலைவர்களும், அரசியல் பரபரப்பில் இருந்து ஒதுங்கி, குடும்பத்துடன் ஹாயாக பொழுதுபோக்கி வருகின்றனர்.