விளம்பர பலகை சரிந்து விழுந்த விபத்து பெட்ரோல் போட வந்த தம்பதி பலி
விளம்பர பலகை சரிந்து விழுந்த விபத்து பெட்ரோல் போட வந்த தம்பதி பலி
ADDED : மே 17, 2024 12:33 AM

மும்பை: மும்பையில் பிரமாண்ட விளம்பர பலகை சரிந்து விழுந்த விபத்தில், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவில் இருந்து ஓய்வு பெற்ற பொது மேலாளர், மனைவியுடன் சிக்கி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பையில் கடந்த 13ம் தேதி பயங்கர சூறாவளி காற்று வீசியது.
அப்போது, காட்கோபரின் சேதா நகர் பகுதியில், பெட்ரோல் பங்கையொட்டி அமைக்கப்பட்டு இருந்த பிரமாண்ட விளம்பர பலகை சரிந்து விழுந்தது.
மொத்தம் 120 அடி உயரமும், 120 அடி அகலமும், 250 டன் எடையும் உடைய இந்த விளம்பர பலகையின் கீழ், 100க்கும் மேற்பட்டோர் சிக்கினர்.
அவர்களில் 14 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்; 75க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். அதில், 41 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இடிபாடு களுக்குள் சிக்கிய காரில் கணவன் - மனைவி உயிரிழந்த நிலையில் கிடப்பது நேற்று முன்தினம் இரவு கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள், மனோஜ் சன்சோரியா, 60, மற்றும் அவரது மனைவி அனிதா என்பது விசாரணையில் தெரியவந்தது.
விமான போக்குவரத்து பிரிவின் பொது மேலாளராக பணியாற்றிய மனோஜ் கடந்த மார்ச் மாதம் பணி ஓய்வு பெற்றார். அதன் பின், மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் வசித்து வந்தார்.
மகனை காண அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்த தம்பதி, விசா பணிகளுக்காக கடந்த 13ம் தேதி மும்பை வந்தனர். பணி முடிந்து திரும்பும் போது, காட்கோபர் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போடும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
அவர்களின் உடல்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் மீட்கப்பட்டதை அடுத்து, பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, இடிபாடுகளில் சிக்கிய உடல்கள் அனைத்தும் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, 66 மணி நேரம் தொடர்ந்த மீட்புப் பணி நேற்று காலை 10:30 மணியுடன் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

