ADDED : மே 25, 2024 05:26 AM
தாவணகெரே : ஒரே குடும்பத்தின் மூவர், மர்மமான முறையில் மாயமாகி உள்ளனர். அவர்களை போலீசார் தேடுகின்றனர்.
தாவணகெரே வினோபா நகரில் வசிப்பவர் அஞ்சன்பாபு, 30. இவரது மனைவி நாகவேணி, 25. தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. அஞ்சன்பாபு, பி.ஜி., லே ---- அவுட் பேடகி ஷெட்டர் பள்ளி அருகில் உள்ள, ஷேர் மார்க்கெட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
நாகவேணியின் தாய் ருத்ரவ்வா, வாரம் ஒரு முறை மகளின் வீட்டுக்கு வந்து செல்வார். அதன்படி ஏப்ரல் 12ல், மதியம் 3:00 மணிக்கு மகளின் வீட்டுக்கு வந்தார்.
மருமகன் பணிக்கு சென்றிருந்ததால், மகள் மற்றும் பேத்தியுடன் இருந்தார். மாலை 6:00 மணியளவில், நாகவேணிக்கு போன் செய்து பேசியுள்ளார். சிறிது நேரத்தில் நாகவேணி, தன் தாயிடம், 'வீட்டிலேயே இரு, நான் போய் என் கணவரை அழைத்து வருகிறேன்' என, கூறிவிட்டு மகளையும் துாக்கிக் கொண்டு சென்றார்.
இரவு 8:30 மணியளவில், தாய்க்கு போன் செய்த நாகவேணி, 'நாங்கள் காலையில் வருகிறோம். நீ உணவு சாப்பிட்டு உறங்கு' என, கூறினார். ஆனால் காலை அவர்கள் வரவில்லை. போனும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. ருத்ரவ்வா பணிக்குச் செல்ல வேண்டியிருந்ததால், மகளின் வீட்டை பூட்டிக்கொண்டு ஊருக்குச் சென்றார்.
பல நாட்களாகியும் மகளிடம் இருந்து போன் வரவில்லை. தன் உறவினர்களிடம் கூறி, மகளை பற்றி விசாரிக்கும்படி கூறினார். அவர்களும் நாகவேணி வீடு பூட்டியிருப்பதாக கூறினர்.
பீதியடைந்த ருத்ரவ்வா, பல இடங்களில் மகள், மருமகன், பேத்தியை தேடினார். எந்த தகவலும் தெரியாததால் போலீஸ் நிலையத்தில், புகார் செய்துள்ளார். போலீசாரும் விசாரிக்கின்றனர்.
தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, அஞ்சன்பாபுவுக்கு ஏராளமான கடன், சொத்து பிரச்னையும் இருந்தது. கடன் தொல்லையால் அவர் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டாரா அல்லது கடத்தப்பட்டனரா என்பது, விசாரணைக்கு பின்னரே தெரியும்.
