சினிமாவில் பார்த்த காட்சியை நம்பி புதையல் வேட்டைக்கு திரண்ட கூட்டம்
சினிமாவில் பார்த்த காட்சியை நம்பி புதையல் வேட்டைக்கு திரண்ட கூட்டம்
ADDED : மார் 09, 2025 12:15 AM
பர்ஹான்புர்: சினிமாவில் கூறப்பட்ட தகவலைத் தொடர்ந்து, மத்திய பிரதேசத்தின் பர்ஹான்புரில் உள்ள கோட்டைக்கு அருகே, தங்க புதையலை தேடி மக்கள் இரவில் கூட்டம் கூட்டமாக குவிகின்றனர்.
ஆண், பெண், பெரியவர், சிறியவர் என, அனைவரும் அந்த பகுதியில், கடப்பாரை, மண்வெட்டியுடன் புதையலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வரலாற்று தகவல்
மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில், பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள பர்ஹான்புரில் புகழ்பெற்ற ஆசிகார் கோட்டை அமைந்துள்ளது.
இதற்கு சற்று தள்ளி, தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி சமீபத்தில் நடந்தது. ஜே.சி.பி., இயந்திரத்தால் வெட்டி எடுக்கப்பட்ட மண், ஹாரூன் ஷேக் என்பவர் நிலத்தில் குவிக்கப்பட்டது. அப்போது அதில், சில புராதன உலோக காசுகள் கிடைத்தன.
இதற்கிடையே சமீபத்தில், சாவா என்ற ஹிந்தி படம் வெளியானது. முகலாயர் காலம் தொடர்பான வரலாற்று தகவல்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. பர்ஹான்புர் குறித்து குறிப்பிடப்பட்டது.
பர்ஹான்புரில் முகலாயர் காலத்தில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் அச்சிடும் ஆலை இருந்ததாக அந்த படத்தில் சில காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதைத் தொடர்ந்து, முகலாயர் காலத்தில் அச்சிடப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், ஆசிகார் கோட்டைக்கு அருகே புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற செய்தி பரவியது. இது, உள்ளூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தது.
புரளி
உடனடியாக அந்தப் பகுதி மக்கள் இரவில் புதையலைத் தேடி, மண்ணை வெட்டி எடுத்து வருகின்றனர்.
டார்ச் லைட் வெளிச்சத்தில், சிறிய ஆயுதங்களுடன் அவர்கள் புதையல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களும், இங்கு படையெடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே, தங்களுக்கு சில தங்க நாணயங்கள் கிடைத்ததாக சிலர் புரளியை பரப்பிவிட்டனர். அதை உண்மை என்று நம்பி, கோட்டைக்கு அருகே புதையல் வேட்டையில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர்.