உணவு தாமதத்தால் தாபாவில் தகராறு வாடிக்கையாளர் அடித்துக் கொலை
உணவு தாமதத்தால் தாபாவில் தகராறு வாடிக்கையாளர் அடித்துக் கொலை
ADDED : ஆக 28, 2024 09:03 PM
புதுடில்லி:உணவு கொண்டு வர தாமதம் ஆனதால் ஏற்பட்ட தகராறில் வாடிக்கையாளை அடித்துக் கொலை செய்த தாபா உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு டில்லி ரஜோரி கார்டனில் உள்ள 'கபிலா தாபா'வுக்கு ஹர்னீத் சிங் சச்தேவா மற்றும் அவரது நண்பர்கள் வந்தனர். உணவுக்கு ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தனர். ஆனால், நீண்ட நேரமாக உணவு வரவில்லை. தாபா ஊழியர்களிடம் விசாரித்தனர்.
அப்போது தாபா ஊழியர்களுக்கும், சச்தேவாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஊழியர்கள் தாபா உரிமையாளர்களான கேதன் நருலா மற்றும் அஜய் நருலா ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.
உரிமையாளர்கள் அடியாட்களுடன் தாபாவுக்கு வந்தனர். சச்தேவா, அவரது நண்பர்கள் மற்றும் தாபா உரிமையாளர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தாபா ஊழியர்கள் கத்தி மற்றும் கட்டையால் சச்தேவாவை சரமாரியாக தாக்கினர்.
அவரது நண்பர்கள், சச்தேவாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், சச்தேவா ஏற்கனவே உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர். தகவல் அறிந்து போலீசார் வந்து விசாரணை நடத்தினர். தாபா உரிமையாளர்கள் கேதன் நருலா மற்றும் அஜய் நருலா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து, போலீஸ் துணைக் கமிஷனர் விசித்ரா வீர் கூறுகையில், “ ஆர்டர் செய்த உணவு ஏற்பட்ட தகராறில் சச்தேவா அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதிகலை நேரத்தில் உணவகம் திறக்க அனுமதி இல்லை. அந்த நேரத்தில் தாபா எப்படி இயங்கியது என்பது குறித்தும் விசாரிக்கிறோம்,”என்றார்.
கொலையான சச்தேவாவின் தாய், 'எங்களுக்கு உணவு ஆர்டர் செய்யதான் சச்தேவா சென்றான். தாபாவில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. ஆனால், என் மகனை கத்தி மற்றும் கம்பியால் குத்திக் கொலை செய்துள்ளனர். கொலை செய்யும் அளவுக்கு என் மகன் செய்த தவறு என்ன? என் மகன் கொலைக்கு நீதி வேண்டும்' என்றார்.