ஏட்டை கத்தியால் தாக்கிய பிரபல ரவுடி சுட்டு பிடிப்பு
ஏட்டை கத்தியால் தாக்கிய பிரபல ரவுடி சுட்டு பிடிப்பு
ADDED : செப் 01, 2024 11:30 PM

தாபஸ்பேட்,: கைது செய்ய சுற்றிவளைத்த போது, போலீஸ் ஏட்டை கத்தியால் தாக்கி விட்டு தப்ப முயன்ற, ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்.
பெங்களூரு ரூரல் நெலமங்களா அருகே தாபஸ்பேட்டை சேர்ந்தவர் ஜெயந்த், 27. ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தாபஸ்பேட் அருகே கம்பாலு கிராம பகுதியில், ஜெயந்த் பைக்கில் சுற்றுவதாக, தாபஸ்பேட் இன்ஸ்பெக்டர் ராஜுவுக்கு தகவல் கிடைத்தது.
ராஜு தலைமையில் கம்பாலு கிராமத்திற்கு, போலீசார் சென்றனர். பைக்கில் சுற்றி திரிந்த ஜெயந்த்தை மடக்கினர்.
கைது செய்ய முயன்ற போது, ஏட்டு இம்ரானை கத்தியால் தாக்கிவிட்டு ஜெயந்த் ஓடினார்.
இன்ஸ்பெக்டர் ராஜு துப்பாக்கியால் வானத்தை நோக்கி, ஒரு ரவுண்டு சுட்டு சரண் அடையும்படி எச்சரித்தார். ஆனால் ஜெயந்த் கேட்கவில்லை. அவரை நோக்கி ராஜு துப்பாக்கியால் சுட்டார். ஜெயந்த் வலது காலில் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார்.
அவரை போலீசார் கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். காயம் அடைந்த ஏட்டு இம்ரானும் சிகிச்சை பெறுகிறார்.
கடந்த 2019ம் ஆண்டும் ஒரு கொள்ளை வழக்கில், ஜெயந்த்தை போலீசார் சுட்டு பிடித்தது குறிப்பிடத்தக்கது.