நடிகர் தர்ஷனை திருமணம் செய்வதாக சிறை வாசலில் ரசிகை அழிச்சாட்டியம்
நடிகர் தர்ஷனை திருமணம் செய்வதாக சிறை வாசலில் ரசிகை அழிச்சாட்டியம்
ADDED : செப் 06, 2024 01:57 AM

பல்லாரி, கொலை வழக்கில் கைதாகி பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷனை பார்க்க, ரசிகை ஒருவர் நேற்று வந்தார். தர்ஷனை திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறி, அழிச்சாட்டியம் செய்தார்.
கர்நாடக மாநிலத்தில் பிரபல நடிகராக இருப்பவர் தர்ஷன். தன் தோழிக்கு ஆபாச குறுந்தகவல்களை அனுப்பினார் என்பதற்காக சித்ரதுர்காவின் ரேணுகாசாமியை கூலிப்படை ஏவி கொலை செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
இந்த வழக்கில் தர்ஷன் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளனர். ராஜ உபசாரம் செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, பெங்களூரு சிறையில் இருந்து பல்லாரி சிறைக்கு நடிகர் தர்ஷன் மாற்றப்பட்டார்.
கொலை குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள அவருக்கு எதிராக சாட்சி, ஆதாரங்கள் வலுவாக உள்ளன. சட்டத்தின் பிடி இறுகுவதால் தர்ஷன் தவிக்கிறார். அவர் சிறையில் இருந்தாலும், ரசிகர்களிடையே மவுசு குறையவில்லை.
தர்ஷனை பார்க்க, பெங்களூரில் வசிக்கும் லட்சுமி, 35, என்பவர் பல்லாரி சிறைக்கு நேற்று காலை சென்றார். அவரை சிறை அதிகாரிகள், உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் அதிகாரிகளுடன் தகராறு செய்தார்.
“பழங்களை கொண்டு வந்துள்ளேன். அவற்றை தர்ஷனிடம் கொடுத்து பேசிவிட்டுச் செல்கிறேன்,” என, மன்றாடினார். 'உறவினர்கள் மட்டுமே கைதிகளை பார்க்க அனுமதி உள்ளது' என்றனர் அதிகாரிகள்.
அப்போது லட்சுமி, “என்னை உள்ளே அனுமதித்தால், தர்ஷனை திருமணம் செய்து கொள்ள, நான் தயாராக இருக்கிறேன். விஜயலட்சுமியை போன்று, நானும் அவருக்கு மனைவியாகிறேன்,” என பிடிவாதம் பிடித்தார்.
அப்பெண்ணை அங்கிருந்து அனுப்புவதற்குள், அதிகாரிகளுக்கு போதும், போதும் என்றானது.
லட்சுமி அளித்த பேட்டி:
பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் தர்ஷன் இருந்த போதும், நான் அவரை பார்க்க சென்றேன். அங்கும் என்னை உள்ளே விடவில்லை. இப்போது பல்லாரிக்கு வந்துள்ளேன். என்னை உள்ளே விட மறுக்கின்றனர்.
தர்ஷனுக்காக பழங்கள் கொண்டு வந்துள்ளேன். என்னை உள்ளே விட்டால் பழங்களை கொடுத்துவிட்டு, அவரை பார்த்து பேசிவிட்டு செல்வேன். அவருக்கு சிக்கன் உணவு வேண்டும் என்றால், நானே சமைத்துக் கொண்டு வருவேன். தர்ஷனை திருமணம் செய்து கொள்ள, நான் தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.