கிலாரி இன காளைகளை வளர்க்க ஆர்வம் காட்டும் விஜயபுரா விவசாயி
கிலாரி இன காளைகளை வளர்க்க ஆர்வம் காட்டும் விஜயபுரா விவசாயி
ADDED : ஆக 03, 2024 11:20 PM

கர்நாடகாவின் வடமாவட்டங்களில் விவசாயம் தான், பிரதான தொழிலாக உள்ளது. விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக விவசாயிகள், காளைகளை வளர்க்கின்றனர்.
குறிப்பாக 'கிரிகார், ஹல்லிகார், கவுலவ், ஜவாரி' ஆகிய இன காளைகளை வளர்ப்பதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால் ஒரு விவசாயி சற்று மாறுதலாக யோசித்து, கிலாரி இன காளைகளை வளர்ப்பதில், அதிக ஆர்வம் காட்டுகிறார்.
விஜயபுராவின் பபலேஸ்வரா தாலுகா திகனிபிடாரி கிராமத்தைச் சேர்ந்த ராஜுகவுடா பிரதார், 51, தன் வீட்டில் மஹாராஷ்டிராவில் இருந்து வாங்கப்பட்ட, 'கோசா கிலாரி, சாரங்கா கிலாரி' இனத்தைச் சேர்ந்த இரண்டு காளைகளை வளர்த்து வருகிறார். இந்த காளைகளைக் கொண்டே, விவசாயப் பணிகளை மேற்கொள்கிறார்.
ராஜுகவுடா பிரதார் கூறியதாவது:
என்னிடம் தலா மூன்று தேசி பசுக்கள், எருமை மாடுகள் உள்ளன. 20 ஆடுகளையும் வளர்க்கிறேன். ஆனாலும் கிலாரி இன காளைகளை வளர்ப்பதில், அதிக மகிழ்ச்சி அடைகிறேன். அந்த காளைகளை பயன்படுத்தி, விவசாயம் செய்வதால் ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
கிலாரி இன காளைகள் பராமரிப்பது குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன்.
என்னிடம் 15 ஏக்கர் நிலம் உள்ளது. வெங்காயம், தக்காளி, வெங்காயம், வெண்டைக்காய், மிளகாய் பயிரிட்டு வளர்க்கிறேன். தென்னை, மாம்பழம், கொய்யா மரங்களையும் வளர்க்கிறேன். விவசாயிகளுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.
எனது ஊரில் சில விவசாயிகள், தாங்கள் வளர்க்கும் மாடுகளை இரவு நேரத்தில் கட்டுவதற்கு இடமின்றி உள்ளனர். எனது விவசாய நிலத்தில் கட்டும்படி கூறி உள்ளேன். விவசாயத்துடன், துணை தொழில்களான ஆடு, கோழி வளர்ப்பிலும் விவசாயிகள் ஈடுபட வேண்டும்.
'ஹல்லிகார்' இன காளைகளை, சந்தோஷ் என்பவர் பராமரிப்பது பற்றி கேள்விப்பட்டு உள்ளேன். நானும் கிலாரி இன காளைகளை பாதுகாப்பதில் ஆர்வம் காட்டுகிறேன். காளைகளை பாதுகாப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -