ADDED : ஆக 01, 2024 11:05 PM
விஜயபுரா: திருநங்கையை நிர்வாணமாகி சக திருநங்கையர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜயபுரா டவுன் பஸ் நிலையத்தில் சுற்றி தெரியும் திருநங்கையர், அங்கு வரும் பயணியரிடம் இருந்து பணம் வாங்கி பிழைப்பு நடத்துகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் பஸ் நிலையத்தில் வைத்து ஒரு திருநங்கையை, ஏழு திருநங்கையர் சுற்றி வளைத்து தாக்கியதுடன், ஆடைகளை கிழித்து நிர்வாணமாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினர்.
தாக்குதலுக்கு ஆளான திருநங்கை கிழிக்கப்பட்ட உடையுடன் அங்கிருந்து சென்றார். இதை, பயணியர் மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். யாரோ ஒருவர் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ வேகமாக பரவியது.
விஜயபுரா எஸ்.பி., ரிஷிகேஷ் சோனாவாலே கவனத்திற்கும் சென்றது. ''பணத்தை பங்கு போடும் விஷயத்தில் திருநங்கையருக்கு இடையில் தகராறு ஏற்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம். விசாரணை நடக்கிறது,'' என்றார்.