ஆந்திராவில் கட்சி துவங்கிய முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி
ஆந்திராவில் கட்சி துவங்கிய முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி
ADDED : மே 03, 2024 02:00 AM

விசாகப்பட்டினம்,ஆந்திராவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி லஷ்மி நாராயணா, ஜெய் பாரத் தேசிய கட்சி என்ற புதிய கட்சியை துவங்கி, விசாகப்பட்டினம் வடக்கு சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில், சி.பி.ஐ., இணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் லஷ்மி நாராயணா.
முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இணைந்து 2019 லோக்சபா தேர்தலில் விசாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். அதன் பின் கட்சியில் இருந்து விலகினார்.
தற்போது, ஜெய் பாரத் தேசிய கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை துவக்கியுள்ளார். ஆந்திராவில் உள்ள 175 சட்டசபை மற்றும் 25 லோக்சபா தொகுதிகளுக்கு வரும் 13ல் தேர்தல் நடக்கிறது.
இதில், 15 லோக்சபா, 10 சட்டசபை தொகுதிகள் மற்றும் தெலுங்கானாவின் ஐந்து லோக்சபா தொகுதிகளில் இவரது கட்சி போட்டியிடுகிறது.
கடந்த 2012ல் சொத்து குவிப்பு வழக்கில் ஜெகன் மோகன் ரெட்டி சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கை தலைமை ஏற்று விசாரித்த அதிகாரி என்ற வகையில் லஷ்மி நாராயணா பிரபலம் அடைந்தார்.
''ஒய்.எஸ்.ஆர். காங்., தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் குடும்ப கட்சிகளாக உள்ளன. தனக்கு வாய்ப்பளித்தால் மக்கள் நலன் சார்ந்த அரசை மாநிலத்தில் உருவாக்கி காட்டுவோம்,'' என, லஷ்மி நாராயணா தெரிவித்துள்ளார்.