ADDED : ஏப் 20, 2024 11:02 PM

புதுடில்லி:கிழக்கு டில்லியில் நேற்று கட்டுமானப்பணி நடந்து கொண்டிருந்த நான்கு மாடிக்கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது.
கல்யாண்புரியில் நான்கு மாடிக்கட்டடம் கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டடம் நேற்று மாலை 4:00 மணி அளவில் இடிந்து விழுந்தது. கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, கட்டடம் திடீரென ஒருபுறமாக சாய்ந்தது.
இதனால் போலீசாரும் மீட்புப்படையினரும் உஷார் படுத்தப்பட்டனர். அங்கு விரைந்து சென்றனர். கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர்.
அருகில் இருந்த மக்களை போலீசார் அப்புறப்படுத்தினர். சீட்டுக்கட்டைப் போல் கட்டடம் சரிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் துாசி பறந்தது.
முன்கூட்டியே தெரிய வந்ததால், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டடம் இடிந்து விழுந்ததை அப்பகுதி மக்கள், தங்கள் மொபைல் போன்களில் பதிவு செய்துள்ளனர்.
இந்த காட்சிகள் சமூகவலை தளங்களில் பரவி வருகின்றன.

