ADDED : மே 29, 2024 04:55 AM

துமகூரு : குடும்ப தகராறில் மனைவியை கொன்று, உடல் உறுப்புகளை வெட்டிய, கொடூர கணவர் கைது செய்யப்பட்டார்.
துமகூரின் குனிகல் ஹுலியூர்துர்கா அருகே சுக்கனஹள்ளியின் சிவராம், 38. இவரும் ஷிவமொகாவின் சாகரை சேர்ந்த புஷ்பா, 32 என்பவரும், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர். எட்டு வயதில் மகள் உள்ளார்.
ஹுலியூர்துர்கா டவுன் ஹொஸ்பேட்டில் சிவராம், மனைவி, மகளுடன் வாடகை வீட்டில் வசித்தார். மர அறுவை ஆலையில் வேலை செய்தார். கணவன், மனைவி இடையில் கடந்த சில தினங்களாக, அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில், புஷ்பாவை பிடித்து சமையல் அறைக்குள் தள்ளிய சிவராம், கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளார். பின்னர் புஷ்பாவின் உடல் உறுப்புகளையும், கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி உள்ளார்.
நேற்று காலை கொலை பற்றி, ஹுலியூர்துர்கா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வீட்டின் அருகே புதரில் பதுங்கி இருந்த, சிவராமை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது.