ADDED : செப் 13, 2024 08:01 AM

பெங்களூரு: பெங்களூரில் ரோடு பள்ளங்களை, விரைந்து மூடும் நோக்கில், 'ஜெட் பேச்சர் இயந்திரம்' பயன்படுத்தப்படுகிறது.
இது தொடர்பாக, ராஜராஜேஸ்வரி நகர் மண்டல இணை கமிஷனர் அஜய் கூறியதாவது:
பெங்களூரில் ரோடு பள்ளங்கள் எண்ணிக்கை அதிகரிக்கின்றன. இவற்றை மூடுவது பெரும் தலைவலியாக உள்ளது. ரோடு பள்ளங்களை எளிதில் மூட, 'ஜெட் பேச்சர்' என்ற இயந்திரம், வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. முதற் கட்டமாக ராஜராஜேஸ்வரி நகர் மண்டலத்தில், சோதனை முறையில் இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.
பந்தரபாளையா, நாயண்டஹள்ளி மெட்ரோ ரயில் நிலையம் அருகில், ரோடு பள்ளங்கள் மூடும் பணிகள் நடக்கின்றன. பத்து பேர் செய்ய கூடிய பணிகளை, ஜெட் பேச்சர் இயந்திரம் ஒரு மணி நேரத்தில் முடிக்கும். இதன் செயல் திறன் சோதிக்கப்படுகிறது.
ரோட்டின் பள்ளத்தில், சிமென்ட் கலவை பைப் வழியாக கொட்டும். அதை காம்பாக்டர் சமநிலைப்படுத்தும். அதன்பின் சிறிது நேரத்தில் வாகன போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும். இரவு, பகல் பாராமல் பள்ளங்கள் மூடப்படுகின்றன.
ராஜராஜேஸ்வரி மண்டலத்தில், 20 வார்டுகள் உள்ளன. 216.45 கி.மீ., மெயின் ரோடுகள் உட்பட, 2,045 கி.மீ., துார ரோடுகள் உள்ளன. மே 20 வரை 2,443 பள்ளங்கள் அடையாளம் காணப்பட்டன. 2,408 பள்ளங்கள் மூடப்பட்டன. 35 பள்ளங்கள் மூடும் பணிகள் நடக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.