ADDED : மார் 05, 2025 11:08 PM
மாலுார்: காதலனை சேர்த்து வைக்கும்படி, சுவாமிக்கு காதலி எழுதிய வேண்டுதல் கடிதம், சிக்க திருப்பதி கோவில் உண்டியலில் கிடைத்தது.
சிக்க திருப்பதி வெங்கட்ரமண சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணும் பணி, நேற்று காலை துவங்கி மாலையில் முடிந்தது. உண்டியல் எண்ணும் பணி, கோவில் செயல் அலுவலர் செல்வமணி முன்னிலையில் நடந்தது. கோவில் வளாகத்தில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியில் தாலுகா வருவாய்த்துறை அதிகாரிகள், கனரா வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.
காணிக்கைகளுக்கு இடையே ஒரு கடிதமும் இருந்தது. அந்த கடிதத்தில், 'திருப்பதி திம்மப்பா, நான், உங்கள் சன்னிதிக்கு வந்து வணங்குகிறேன். என்னையும் பிரதீப்பையும் ஒன்றாக்குங்கள். அவர் என்னை விட்டுப் போகாமல், இன்னும் அதிகமாக நேசிக்க செய். நாங்கள் இருவரும் விரைவில் ஒன்றுசேர வேண்டும். என்னை ஆபீசில் வந்து பார்க்க வேண்டும். நான் அவரைப் பற்றி எப்படி உணர்கிறேனோ, அதேபோல் அவரும் என்னை உணர செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்' என, கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
சுவாமிக்கு ஒரு இளம்பெண் இந்த கடிதத்தை எழுதியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதவிர, உண்டியலில் கடந்த மூன்று மாதங்களில் பக்தர்கள் செலுத்தி இருந்த 50 ஆயிரம் ரூபாய்; 35 கிராம் தங்க நகைகள், 154 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவை இருந்தன.