ADDED : மே 09, 2024 05:33 AM
சிக்கமகளூரு : மலைப் பகுதிகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்கு படையெடுத்து வந்த யானைகள், தற்போது மாவட்டத்தின் முக்கிய சாலைகளிலும் தென்பட துவங்கியுள்ளன.
சிக்கமகளூரு மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் மீண்டும் வன விலங்குகளின் அச்சுறுத்தல் அதிகரித்து உள்ளது.
இத்தனை நாட்களாக காபி, பாக்கு, வாழை, மிளகுத் தோட்டங்களை சேதப்படுத்தி வந்த யானைகள், தற்போது முக்கிய சாலைகளில் முகாமிட்டு வருகின்றன.
மாவட்டத்தின் முடிகெரேயில் உள்ள சார்மாடி காட்டின் இரண்டாவது திருப்பத்தில், நேற்று ஒற்றை யானை ஒன்று சுற்றிக் கொண்டிருந்தது.
இதை பார்த்த வாகன ஓட்டிகள், வெகு தொலைவில் வாகனங்களை நிறுத்திவிட்டனர். இதனால் பல கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன.
இதுதொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டும் வனத்துறையினர் வராததால், வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்தனர்.
சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்த யானை, பின் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.