தந்தையை காப்பாற்ற ஆம்புலன்ஸ் டிரைவராக மாறிய பாசக்கார மகன்
தந்தையை காப்பாற்ற ஆம்புலன்ஸ் டிரைவராக மாறிய பாசக்கார மகன்
ADDED : ஜூன் 02, 2024 06:11 AM

பெலகாவி: காதில் வெட்டுக் காயம் அடைந்த தந்தையை காப்பாற்ற, அரசு மருத்துவமனையில் டிரைவர் இல்லாததால், மகனே ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்றார்.
பெலகாவி சிக்கோடி ஜன்வாடா கிராமத்தில் வசிப்பவர் சித்து பூஜாரி, 47. விவசாயி.
இவருக்கும், இவரது மனைவி குடும்பத்தினருக்கும் நேற்று காலை தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் சித்து பூஜாரி, காதில் வெட்டு காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு, சடலகா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
காதில் தையல் போட்டும் ரத்தம் நிற்கவில்லை. இதனால் சிக்கோடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி, டாக்டர்கள் கூறினர்.
சடலகா அரசு மருத்துவமனை முன் நின்ற, ஆம்புலன்சில் சித்து பூஜாரியை அனுப்பும்படி, உறவினர்கள் கேட்டனர். ஆம்புலன்சுக்கு டிரைவர் இல்லை என, டாக்டர்கள் கூறினர்.
அப்போது அங்கு இருந்த சித்து பூஜாரி மகன் மல்லு பூஜாரி, 22, 'எனக்கு வாகனம் ஓட்டத் தெரியும். நான் ஆம்புலன்சில் தந்தையை அழைத்துச் செல்லவா?' என, டாக்டர்களிடம் கேட்டார்.
டாக்டர்களும் ஒப்புக் கொண்டதால், சித்து பூஜாரியை ஆம்புலன்சில், சிக்கோடி அரசு மருத்துவமனைக்கு மல்லு பூஜாரி அழைத்துச் சென்றார்.
தந்தையை காப்பாற்ற ஆம்புலன்ஸ் ஓட்டிய மகனை, ஜன்வாடா கிராமத்தினர் பாராட்டுகின்றனர்.