தாய், மனைவி, 3 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த நபர்
தாய், மனைவி, 3 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த நபர்
ADDED : மே 12, 2024 12:39 AM
சீதாப்பூர், உத்தர பிரதேசத்தில் தாய் மற்றும் மனைவியைக் கொன்றதுடன், மூன்று குழந்தைகளை மாடியில் இருந்து வீசி கொலை செய்த நபர் தற்கொலை செய்து கொண்டார்.
உத்தர பிரதேசத்தின் சீதாப்பூர் நகரை ஒட்டி, பல்ஹாபூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு, அனுராக் சிங், 42, என்பவர் தன் தாய், மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
தீவிர போதை பழக்கத்துக்கு அடிமையான அனுராக், குடும்பத்தினருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்தார். அவரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்கு அனுராக் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று இது தொடர்பாக அவர்களின் குடும்பத்தில் வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதன் முடிவில், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, தாய் சாவித்ரியை நோக்கி அனுராக் சரமாரியாக சுட்டார். இதில் அவர் இறந்தார். இதையடுத்து, சுத்தியலால் மனைவி பிரியங்காவை கொடூரமாக தாக்கியதில் அவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஆத்திரம் தீராத அனுராக், தன் குழந்தைகளான அஸ்வினி, 12, ஆர்னா, 9, ஆத்விக், 6, ஆகியோரை வீட்டு மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டார்.
இதில், அஸ்வின், ஆர்னா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிறுவன் ஆத்விக் மட்டும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார்.
இதையடுத்து, தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு அனுராக் தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் ஆத்விக்கும் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், அதிக போதையால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்த அனுராக், தாய், மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.