ADDED : மே 06, 2024 11:57 PM
உத்தரகன்னடா, ;கர்நாடக மாநிலம், உத்தரகன்னடா, தான்டேலியின் ஹாலமட்டி கிராமத்தில் வசிப்பவர் ரவிகுமார் ஷெல்லே, 34. இவரது மனைவி சாவித்திரி, 28. இத்தம்பதிக்கு வினோத், 6, என்ற மகன் இருந்தார். சிறுவனுக்கு பிறவி முதலே பேச்சு வரவில்லை.
இதை காரணம் காண்பித்து, மனைவியை ரவிகுமார் அடிக்கடி துன்புறுத்தி வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இரவு, தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது. பொறுமை இழந்த சாவித்திரி, மகனை அழைத்து கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார்.
கிராமத்தின் அருகில், முதலைகள் அதிகம் காணப்படும் காளி ஆற்றில் மகனை தள்ளினார். இதை பார்த்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஆற்றில் சிறுவனை தேடும் பணியை துவக்கினர்.
இரவு என்பதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. மறுநாள் அதிகாலை பணிகளை துவக்கினர்.
முதலை ஒன்று சிறுவனின் உடலை வாயில் கவ்வியபடி ஆற்றில் செல்வதை பார்த்தனர். மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி, முதலை வாயில் இருந்து சிறுவன் உடலை மீட்டனர்.
இதற்கு காரணமான தாயையும், தந்தையையும் போலீசார் கைது செய்தனர்.