நுரையீரலில் சிக்கிய மூக்குத்தி 12 ஆண்டுகளுக்கு பின் அகற்றம்
நுரையீரலில் சிக்கிய மூக்குத்தி 12 ஆண்டுகளுக்கு பின் அகற்றம்
ADDED : மே 01, 2024 09:43 PM
திருவனந்தபுரம்,:கேரள மாநிலம் கொல்லம் அருகே சாஸ்தாம்கோட்டையைச் சேர்ந்த, 44 வயதான பெண் அணிந்திருந்த மூக்குத்தியின் ஒரு பகுதியை, 12 ஆண்டுகளுக்கு முன் காணவில்லை. நாட்கள் செல்லச் செல்ல அந்தப்பெண் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார். ஆஸ்துமாவாக இருக்கும் என்று கருதி, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
சில நாட்களுக்கு முன், கொல்லத்தில் தனியார் மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், நுரையீரலில் ஏதோ ஒரு சிறிய பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நடத்திய பரிசோதனையில் பெண்ணின் நுரையீரல் சிக்கி இருந்தது தங்க மூக்குத்தியின் ஒரு பாகம் என்பது தெரிந்தது. அதைத் தொடர்ந்து, நவீன சிகிச்சை மூலம், 1 செ.மீ., நீளமுள்ள மூக்குத்தியின் பாகத்தை வெளியே எடுத்தனர். அந்த பெண் தூங்கும் போது மூக்குத்தியின் பாகம் உடைந்து நுரையீரலுக்கு சென்றிருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். தற்போது, அந்த பெண் நலமாக உள்ளார்.

