ADDED : ஆக 23, 2024 11:13 PM
விஜயபுரா: கட்டுமான பணிகள் நடக்கும் கட்டடத்தில் ஏழு மாத பச்சிளம் பெண் குழந்தையை வீசிச் சென்ற பெற்றோரை, போலீசார் தேடி வருகின்றனர்.
விஜயபுரா நகரின் பத்மாவதி காலனியில், புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகள் நடக்கின்றன. நேற்று காலையில், சிலர் இந்த வழியாக நடைபயிற்சி சென்றனர். அப்போது, அந்த கட்டடத்தில் இருந்து, குழந்தையின் அழுகுரல் கேட்டது. உள்ளே சென்று பார்த்த போது, பிறந்து ஏழு மாதமே ஆன பச்சிளம் பெண் குழந்தை இருப்பது தெரிந்தது.
அப்பகுதியினர் குழந்தையை துாக்கி, சமாதானம் செய்து பால் புகட்டினர். கட்டட உரிமையாளர் கிருஷ்ணப்பாவுக்கு தகவல் கொடுத்தனர். அவர், ஆதர்ஷா நகர் போலீசாருக்கும், மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
அங்கு வந்த போலீசார், குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். குழந்தையை துணியில் சுற்றி வைத்திருந்தனர். பத்மாவதி நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து, குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்க, போலீசார் முயற்சிக்கின்றனர்.