ADDED : மே 25, 2024 04:58 AM
பாகல்கோட், : பாகல்கோட் இளகல்லில் வசிப்பவர் பசவராஜ் பஜந்த்ரி. இவரது மனைவி நீலம்மா. தம்பதிக்கு தாமண்ணா பஜந்த்ரி என்ற 13 மாத ஆண் குழந்தை உள்ளது. சில நாட்களாக, மூச்சுத்திணறலால் குழந்தை அவதிப்பட்டு வந்தது.
நான்கு நாட்களுக்கு முன்பு, பாகல்கோட்டின் தனியார் மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர். குழந்தை பிழைப்பது கஷ்டம் என, டாக்டர் கூறியதால் வீட்டுக்கு அழைத்து வந்தனர். நேற்று முன் தினம் மாலையில் குழந்தை மயங்கியது.
இதனால் குழந்தை இறந்துவிட்டதாக கருதி, இறுதிச் சடங்குகள் நடத்த ஏற்பாடு செய்தனர்.
உறவினர்களும் வந்திருந்தனர். அப்போது குழந்தை இருமியது. அப்போது தான் குழந்தை உயிரோடு இருப்பது தெரிந்தது. இது கடவுளின் அருள் என, பெற்றோரும், உறவினர்களும் கூறினர்.
குழந்தையை தர்காவுக்கு அழைத்துச் சென்றனர். இளகல் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை தொடர்கிறது.
இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:
குழந்தையின் உள் உறுப்புகள் செயலிழந்ததால், உயிர் பிழைப்பது கஷ்டம் என பாகல்கோட்டின், தனியார் மருத்துவமனை டாக்டர்கள் கூறியுள்ளனர்.
எனவே குழந்தையை பெற்றோர், வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறவில்லை.
குழந்தை சுயநினைவின்றி, மயக்கத்தில் இருந்தது. இருமியதால் உயிரோடு இருப்பது தெரிந்தது. சிகிச்சைக்காக எங்களிடம் அழைத்து வந்துள்ளனர். சிகிச்சை அளிக்கிறோம். தற்போது குழந்தையின் நாடித்துடிப்பு நன்றாகவே உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

