ஒன்றரை ஆண்டாகியும் திறக்கப்படாத 'பார்க்கிங்' கட்டடம்
ஒன்றரை ஆண்டாகியும் திறக்கப்படாத 'பார்க்கிங்' கட்டடம்
ADDED : மே 28, 2024 06:31 AM

யஷ்வந்த்பூர்: யஷ்வந்த்பூர் ஏ.பி.எம்.சி., வளாகத்தில், 80 கோடி ரூபாயில் பல அடுக்குமாடி பார்க்கிங் வளாகம் கட்டி முடித்து, ஒன்றரை ஆண்டு ஆகியும், இதுவரை திறக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு யஷ்வந்த்பூரில் ஏ.பி.எம்.சி., எனும் விவசாய உற்பத்தி சந்தை அமைந்துள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால், சாலையிலேயே நிறுத்தும் நிலை ஏற்பட்டது.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, கால விரயம் ஆகிறது. யஷ்வந்த்பூர், கொரகுண்டேபாளையா மெட்ரோ ரயில் நிலையம், துமகூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை, யஷ்வந்த்பூர் ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில், வியாபாரிகளும், விவசாயிகளும், வாடிக்கையாளர்களும் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர்.
அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதையடுத்து, ஏ.பி.எம்.சி., வளாகத்தில், எட்டு மாடிகள் கொண்ட வாகன நிறுத்தும் கட்டடம் கட்ட, பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்தது. 2018ல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. பணிகள் ஆரம்பித்த போது சுறுசுறுப்பாக இருந்தது. பின், தொய்வு ஏற்பட்டு, தாமதம் ஆனது.
இடையில், கட்டடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்து, சில மாதங்கள் பணிகள் நிறுத்தப்பட்டன. இறுதியில், 80 கோடி ரூபாய் செலவில், 2022 டிசம்பரில் பணிகள் முடிக்கப்பட்டன. அடுக்குமாடி வாகன நிறுத்தும் கட்டடம் திறப்பதற்கு தயாரானது.
இங்கு ஒரே நேரத்தில், 750 கார்கள், 110 பைக்குகள் நிறுத்த முடியும். ஆனால், பணிகள் முடிந்து, ஒன்றரை ஆண்டு ஆகியும் இதுவரை திறக்கப்படவில்லை.
இது குறித்து ஒரு அதிகாரி கூறுகையில், 'வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணம் வசூலிக்கும் நிறுவனம் குறித்து முடிவு செய்யப்படவில்லை.
டெண்டர் அழைத்து தான் தீர்மானிக்க வேண்டும். லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் ஆனதும், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.