ஓடும் ரயிலில் 'முத்தலாக்' கூறி தப்பியோடிய நபருக்கு வலை
ஓடும் ரயிலில் 'முத்தலாக்' கூறி தப்பியோடிய நபருக்கு வலை
ADDED : மே 04, 2024 01:05 AM
ஜான்சி, மத்திய பிரதேசத்தில், ஓடும் ரயிலில், தன் மனைவிக்கு, 'முத்தலாக்' கூறி கணவர் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில், முகமது அர்ஷாத், 28, என்பவர் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ராஜஸ்தானின் கோட்டா பகுதியைச் சேர்ந்த அப்சானா, 26, என்பவருடன், கடந்த ஜன., 12ல் திருமணம் நடந்தது.
உ.பி.,யின் கான்பூர் தேஹாட் மாவட்டத்தில் உள்ள புக்ராயன் என்ற பகுதி, முகமது அர்ஷாத்தின் சொந்த ஊர். கடந்த வாரம் புக்ராயனுக்கு முகமது அர்ஷாத் மற்றும் அப்சானா சென்றனர். அப்போது, தன் கணவர் முகமது அர்ஷாதுக்கு ஏற்கனவே திருமணமானதை அறிந்து, அப்சானா அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து மாமியாரிடம் கேட்ட போது, அவரும், முகமது அர்ஷாதும் சேர்ந்து, அப்சானாவிடம் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், உ.பி.,யின் கான்பூர் தேஹாட் மாவட்டத்தில் இருந்து ம.பி.,யின் போபாலுக்கு, ரயிலில் முகமது அர்ஷாத், அப்சானா ஆகியோர் சென்றனர். ஜான்சி ரயில் நிலையம் அருகே ரயில் வந்த போது, அப்சானாவிடம் முத்தலாக் கூறி, முகமது அர்ஷாத் தப்பியோடி விட்டார்.
இச்சம்பவம் கடந்த ஏப்., 29ம் தேதி நடந்தது. இது குறித்து அப்சானா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். முஸ்லிம்களில் மூன்று முறை தலாக் கூறி, மனைவியை, கணவர் விவாகரத்து செய்யும் நடைமுறை ஏற்கனவே அமலில் இருந்தது. இதில் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து, 'முத்தலாக்' நடைமுறை சட்டவிரோதம் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.