ADDED : ஆக 15, 2024 03:56 AM

மைசூருக்கு வரும் சுற்றுலா பயணியர், அரண்மனை, மிருகக்காட்சி சாலை உட்பட நகரின் சுற்றுப்புற இடங்களை மட்டும் பார்த்து விட்டு திரும்பி செல்கின்றனர். ஆனால் கிராமப்புறங்களிலும் மனதுக்கு நிம்மதி தரும், இயற்கை அழகு குவிந்து கிடப்பது, இவர்களுக்கு தெரிவது இல்லை.
மைசூரு, டி.நரசிபுரா அருகில் ஒட்டுகல்லு ரங்கசுவாமி மலை உள்ளது. இது ஆத்திகர், நாத்திகர் என, அனைவரும் விரும்பும் சுற்றுலா தலமாகும். ஒட்டுகல்லு ரங்கசுவாமி மலை, புண்ணிய தலமாகவும் விளங்குவதால், இங்கு வரும் சுற்றுலா பயணியர், மலை மீது ஏறி ஒட்டுகல்லு ரங்கசாமியை தரிசனம் செய்கின்றனர்.
காலை முதல் மாலை வரை இயற்கையின் மடியில் அமர்ந்து, மன நிம்மதி அடைகின்றனர்.
சித்தர்கள்
ஒட்டுகல்லு ரங்கசுவாமி மலையில் சித்தர்கள் வசிப்பதாக ஐதீகம். இங்கு வந்து பக்தியுடன் வேண்டினால், விரும்பியது கிடைக்கும் என, ஊர் பெரியவர்கள் கூறுகின்றனர்.
டி.நரசிபுராவில் இருந்து 9 கி.மீ., தொலைவில், பன்னுாருக்கு அருகில் ஒட்டுகல்லு ரங்கசுவாமி மலை உள்ளது. இது பல சிறப்புகளை தன்னுள்ளே அடக்கியுள்ளது. இயற்கையை ரசிக்கும் நோக்கில், தினமும் சுற்றுலா பயணியர் கூட்டம், கூட்டமாக வருகின்றனர்.
மலையின் பாறைக்கற்களுக்கு இடையே உள்ள குகைகள், சுரங்கங்களே சித்தர்களின் இருப்பிடமாக இருந்தது. இங்கிருந்து தவம் செய்தனராம்.
எனவே இந்த மலைக்கு சித்திகிரி, சித்தனபெட்டா என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் அருகில் உள்ள சித்ரள்ளியில் சித்தர்கள் அதிகமாக வசித்துள்ளனர்.
அப்போது இந்த ஊர் சித்தரஹள்ளி என அழைக்கப்பட்டது. நாளடைவில் சிதரவள்ளி என மாறி, இப்போது சித்ரள்ளி ஆனது.
ஒட்டுகல்லு ரங்கசுவாமி மலை, மற்ற மலைகளை போன்று உயரமானது அல்ல. கஷ்டமில்லாமல் இங்குள்ள படிகளில் ஏறலாம்.
கற்பாறைகள், குகைகள், சுரங்கங்கள் அதிகம் இருந்ததால், ரிஷி, முனிவர்கள், சாது, சன்னியாசிகளுக்கு மிகவும் விருப்பமான இடமாக இருந்தது. இவர்கள் வாழ்ந்ததற்கான பல அடையாள சின்னங்களை இப்போதும் காணலாம்.
சுரங்கப்பாதை
முந்தைய காலத்தில், ஒட்டுகல்லு ரங்கசாமி மலையில் இருந்து, மாண்டியா மாவட்டம், மலவள்ளியின் குந்துார் மலைக்கு சுரங்கப்பாதை இருந்தது. இந்த சுரங்கப்பாதை வழியாக சித்தர்கள் நடமாடினராம். மலையின் மத்திய பகுதியில் குகை உள்ளது.
இது, மேகல குகை என அழைக்கப்படுகிறது. இதன் உள்ளிருந்து பாய்ந்து வரும் நீரூற்றை சித்தங்கை, அந்தரகங்கை என அழைக்கின்றனர்.
இங்கு கவி மடத்தின் சிவயோகி, பூஜை, கைங்கர்யங்களை செய்து வந்தார். பூஜை முடியும் வரை புலி, கரடி போன்ற விலங்குகள், அவரை சுற்றிலும் அமர்ந்திருக்குமாம். மலையின் ஒரு இடத்தில் பசப்ப சுவாமி பாறை உள்ளது.
மழைக்காலத்தில் சரியாக மழை பெய்யாமல், பஞ்சம் ஏற்பட்டால் ஊர் பெரியவர்கள் சேர்ந்து, வீடு வீடாக சென்று தானியங்கள் தானம் பெற்று பசப்ப சுவாமிக்கு, பக்தி சிரத்தையுடன் பூஜை செய்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம்.
மலை மீதேறி நின்று சுற்றிலும் பார்த்தால், கண்களுக்கு எட்டும் துாரம் வரை பசுமையான இயற்கை காட்சிகள், மனதை கொள்ளை கொள்ளும்.
காவல் தெய்வம்
ஒட்டுகல்லு ரங்கசாமி மலையின் அருகிலேயே, சோமேஸ்வரா கோவில் உள்ளது. இது மிகவும் அபூர்வமானது. இந்த ஊரை சுற்றிலும் சித்தேஸ்வர சுவாமி, பீரேஸ்வரா, சிக்கம்மா, தொட்டம்மா கோவில்கள், கணபதி, சத்ய நாராயணா சுவாமி கோவிலும் உள்ளன.
சித்தேஸ்வர சுவாமியே ஊரின் காவல் தெய்வமாக விளங்குகிறார். மிகவும் சக்தி உடையவர். குதிரையில் சுற்றி வந்து காவல் காப்பதாக மக்கள் நம்புகின்றனர். ஊரில் யாராவது தவறு செய்தால், பாம்பு உருவெடுத்து வந்து மிரட்டுவாராம்.
ஒட்டுகல்லு ரங்கசாமி மலையில் வசித்த சித்தர்கள் வீரசைவர்கள். இவர்கள் ரங்கநாத சுவாமியின் பக்தர்களாக இருந்துள்ளனர். இந்த தலம் சைவர்கள், வைஷ்ணவர்களின் புண்ணிய தலமாக போற்றப்படுகிறது.