தேர்தல் பணி செய்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
தேர்தல் பணி செய்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
ADDED : ஏப் 27, 2024 01:03 AM
கரியாபந்த், சத்தீஸ்கரில், தேர்தல் பணியில் இருந்த ஆயுதப் படை பிரிவு போலீஸ்காரர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்து கொண்டார்.
சத்தீஸ்கரில் உள்ள மூன்று லோக்சபா தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இங்குள்ள மஹாசாமுண்ட் தொகுதிக்கு உட்பட்ட குடேதாதர் கிராமத்தில் உள்ள பள்ளியில், அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச் சாவடியில், வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்தனர்.
அங்கு மத்திய பிரதேச சிறப்பு ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த ஹெட் கான்ஸ்டபிள் ஜியாலால் பவார் உள்ளிட்ட பலர் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
ஜியாலாலுக்கு பணி எதுவும் ஒதுக்காத நிலையில், அறை ஒன்றில் இருந்த அவர், திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு, தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கான காரணம் எதுவும் தெரியாத நிலையில், அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அவர், தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது.
மற்றொரு சம்பவம்
ராய்ப்பூரில் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ., தேவ்தி கர்மா வீட்டில், சத்தீஸ்கர் ஆயுதப் படை பிரிவைச் சேர்ந்த போலீசார் பணியில் இருந்தனர்.
நேற்று காலை பணிக்கு முன்பாக துப்பாக்கியை சுத்தம் செய்த போது, அதிலிருந்து எதிர்பாராதவிதமாக வெளியேறிய தோட்டா, பணியில் இருந்த கமாண்டர் ராம்குமார் தோஹாரே, ஹெட் கான்ஸ்டபிள் அஜய் சிங் ஆகியோர் மீது பாய்ந்தது.
படுகாயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அஜய் சிங் உயிரிழந்தார்.
ராம்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த அஜய் சிங், மத்திய பிரதேசத்தின் பிஜூரியைச் சேர்ந்தவர்.

