ADDED : ஏப் 16, 2024 05:50 AM

சுதந்திர இந்தியாவின், முதல் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.,யானவர் டேகூரு சுப்ரமண்யம். இவர் தேர்தலில் போட்டியிட்டு ஏழையானது வரலாறு.
இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர் டேகூரு சுப்ரமண்யம். காந்தியவாதியான இவர், நேரு, லால்பகதுார் சாஸ்திரிக்கு நெருக்கமான நண்பர். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கில், அரசியலுக்கு வந்தவர். தேர்தலுக்கு செலவு செய்து, கையை சுட்டுக்கொண்டவர்.
அரசியல் நாகரிகம்
கடந்த 1952ல் நடந்த முதல் லோக்சபா தேர்தலில், பல்லாரி தொகுதியில் சுப்ரமண்யம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட போது, 8,000 ரூபாய் செலவிட்டார். இந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். 1957ல் இரண்டாவது தேர்தலில், 13,000 ரூபாய் செலவானது. 1962ல் நடந்த மூன்றாவது தேர்தலில், செலவு அதிகரித்தது. 1.16 லட்சம் ரூபாய் செலவிட்டார்.
தேர்தல் செலவுக்கு பணம் புரட்ட, தன் நஞ்சை நிலங்களை விற்றார். முதல் இரண்டு தேர்தல்களில், சுப்ரமணியமுக்கு எதிராளியாக இருந்தவர் மஹா பலேஷ்வரப்பா.
சுயேச்சையாக போட்டியிட்ட இவர், சுப்ரமண்யத்தின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது தேர்தலில், ஜகளூரு முகமது இமாம்சாப், போட்டியாளராக இருந்தார். இவருடன் சுப்ரமண்யத்துக்கு நல்லுறவு இருந்தது.
இன்றைய காலத்தில், தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள், எதிரணி வேட்பாளர்களை எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து விமர்சிக்கின்றனர் என்பதை, நாம் கண்கூடாக பார்க்கிறோம்.
ஆனால், சுப்ரமண்யம் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களுடன், நல்ல நட்பு வைத்திருந்ததன் மூலம், அரசியல் நாகரிகத்துக்கு உதாரணமாக இருந்தார்.
ஆந்திராவின், உருவகொண்டதள்ளியில் பிறந்த இவர், பல்லாரியில் வளர்ந்தார். இங்கு பள்ளி கல்வி பெற்றார். சென்னையின் பச்சையப்பா கல்லுாரியில், பட்டப்படிப்பு பெற்றவர்.
அங்கு கிடைத்த தொடர்புகள், அவரை சுதந்திர போராட்டத்துக்கும், அரசியலுக்கும் இழுத்து வந்தது. பல்லாரி தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
நேருவுக்கு நெருக்கம்
தேர்தலுக்கு பெருமளவில் பணம் செலவானதால், இனி தேர்தலில் போட்டியிட வேண்டாம் என, முடிவு செய்தார். கட்சி மேலிடம் இவருக்கு சீட் கொடுத்தும், போட்டியிட அவர் தயாராக இல்லை. காந்தி, நேருவுக்கு நெருக்கமாக இருந்த சுப்ரமண்யம், நேருவின் அரசியல் செயலராக, காங்கிரசின் பார்லிமெண்ட் செயலராக இருந்தவர்.
லால் பகதுார் சாஸ்திரி ரயில்வே அமைச்சராக இருந்த போது, ஒரு முறை அவர் தார்வாடுக்கு வந்திருந்தார். அப்போது பல்லாரிக்கு வந்த அவர், ரயில் நிலையத்தில் இருந்து சுப்ரமண்யம் வீட்டுக்கு, அரசு கார் பயன்படுத்தாமல் ஜட்கா வண்டியில் வந்தார். வீட்டில் ஜமுக்காளத்தில் அவரை அமர்த்தி உபசரித்தனர்.
சாஸ்திரி பிரதமராக இருந்த போது, சுப்ரமணியத்தை மத்திய அமைச்சரவையில் அமர்த்த முன் வந்தார். ஆனால் அதற்கு முன்பே, சுப்ரமணியம் அரசியலில் ஓய்வு எடுக்க முடிவு செய்தார். 1974ல் சுப்ரமண்யம் காலமானார்.
அவரது மகன் டாக்டர் ராமநாத் கூறியதாவது:
என் தந்தை தேர்தலுக்காக, அதிகம் செலவு செய்துவிட்டார். பல்லாரி, ஹொஸ்பேட், சிரகுப்பா, கனேகல், ராமதுர்காவில் எங்களுக்கு நிறைய நிலங்கள் இருந்தன. முதல் தேர்தலுக்கு சில நிலங்கள் கை விட்டு போகின. அதன்பின் இரண்டு தேர்தல்களில், மேலும் நிலங்கள் விற்கப்பட்டன.
மூன்றாவது முறை தேர்தலில் போட்டியிட்ட போது, செலவு அதிகரிப்பதை என் தந்தை புரிந்து கொண்டார். எனவே இனி தேர்தலில் போட்டியிடுவதில்லை என, முடிவு செய்தார். அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம், எப்போதும் அவருக்கு இருந்தது இல்லை. அன்றைய அரசியல்வாதிகளிடமும் இதே குணம் இருந்தது.
நதிகள் இணைப்பு
எங்கள் குடும்பத்தினர், டி.டி.எஸ்., என்ற டிரான்ஸ்போர்ட் நடத்தி வந்தது. எங்களிடம் மூன்று பஸ்கள் இருந்தன. பல்லாரி, சன்டூரு, ராயதுர்கா, கனேகல்லுக்கு பஸ்கள் இயங்கின. லாரிகளும் இருந்தன.
மூன்று தேர்தல் முடிவதற்குள், எங்களின் டிரான்ஸ்போர்ட் தொழில், முற்றிலுமாக நின்று விட்டது.
'ஏழையாவதற்கே நான் அரசியலுக்கு வந்தேன் என' என் தந்தை அவ்வப்போது கூறுவார். நாட்டின் நதிகளை இணைக்க வேண்டும் என, என் தந்தை விரும்பினார்.
காவிரி - கிருஷ்ணா, கிருஷ்ணா - கோதாவரி, கோதாவரி - நர்மதா, யமுனா - கங்கா நதிகளை இணைத்தால், நாட்டில் வறட்சி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என, கூறுவார். லோக்சபாவிலும் இதை பற்றி பேசினார். இது போன்று பல திட்டங்களை வைத்திருந்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.

