ADDED : மே 11, 2024 09:47 PM
பெங்களூரு:ஆபாச வழக்கில் சிக்கி, வெளிநாட்டில் பதுங்கியுள்ள ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவை தேடி தகவல் கொடுப்பவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசளிப்பதாக, ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து, ஜனதா கட்சியின் முதன்மை செயலர் நாகேஷ் கூறியதாவது:
ஹாசன் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு, நாடு மட்டுமின்றி, சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மக்களின் கவுரவத்துக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.
செல்வாக்குமிக்க குடும்பத்தின் மக்கள் பிரதிநிதியே, பெண்களை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்டது, வெட்கக்கேடான விஷயமாகும்.
பிரஜ்வல் தலைமறைவாக இருப்பது சரியல்ல. இவரை கண்டுபிடித்து கொடுப்போருக்கு, ஜனதா கட்சி 'பிரஜ்வல் மிஸ்ஸிங் அவார்டு' பெயரில், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கும்.
பெண்களை பலாத்காரம் செய்தது, பென்டிரைவ் தொடர்பாக பிரஜ்வல் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடக்கிறது. ஆனால் அவரை போலீசார் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இவரை கண்டுபிடித்து கொடுத்தால், எங்கள் கட்சி சார்பில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.