துப்பாக்கி சூடு: அமெரிக்காவில் தீட்டிய திட்டம் மும்பையில் நிறைவேற்றம்
துப்பாக்கி சூடு: அமெரிக்காவில் தீட்டிய திட்டம் மும்பையில் நிறைவேற்றம்
UPDATED : ஏப் 16, 2024 06:13 AM
ADDED : ஏப் 16, 2024 02:20 AM

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு வாசலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், அமெரிக்காவில் திட்டமிடப்பட்டு, உள்ளூர் ஆட்களை வைத்து செயல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பஞ்சாபைச் சேர்ந்த நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால், நடிகர் சல்மான் கான் உயிருக்கு ஆபத்து இருப்பதாக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு நிறுவனம் எச்சரித்ததை அடுத்து, அவருக்கு 'ஒய் பிளஸ்' பாதுகாப்பு வழங்கப்பட்டது.
சமூக வலைதளம்
இந்நிலையில், மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பாந்த்ராவில், சல்மான் கான் வசிக்கும், 'கேலக்சி அபார்ட்மென்ட்ஸ்' வாசலுக்கு, நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது வீட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர்.
இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்பதாக, லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் சமூக வலைதளம் வாயிலாக தெரிவித்துள்ளார். லாரன்ஸ் பிஷ்னோய் உத்தரவுப்படி, இந்த துப்பாக்கிச் சூடு நடத்த அமெரிக்காவிலிருந்து அன்மோல் திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கான பொறுப்பு, அமெரிக்காவில் வசிக்கும் மற்றொரு தாதாவான ரோஹித் கேடாரா என்பவரிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர் தான், நம்பகமான ஆட்களை தேர்வு செய்து அனுப்பி வைத்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
சல்மான் வீட்டு வாசலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, குற்றவாளிகளை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் அன்மோல் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. அதில் ஒருவரது பெயர் விஷால் என்பதும், அன்மோலுக்காக ஏற்கனவே பல கொலைகளை செய்தவர் என்பதையும் போலீசார் உறுதி செய்தனர்.
இவர்கள் இருவரும், மஹாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் இந்த இருசக்கர வாகனத்தை வாங்கி வந்துள்ளனர். அவர்களுக்கு வாகனத்தை விற்ற நபரிடம் விசாரணை நடந்து வருகிறது.
விசாரணை
அன்மோல் பிஷ்னோய்க்கு இந்தியா முழுதும் பல்வேறு மாநிலங்களில் ஆட்கள் இருப்பதால், அவர்கள் வாயிலாக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பெறப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
சல்மான் வீட்டு வாசலில் எப்போதும் நிறுத்தப்பட்டிருக்கும் போலீஸ் வாகனம், சம்பவம் நடந்த அன்று இல்லை. இது குறித்தும் விசாரணை நடக்கிறது.
வழக்கு குறித்து மஹாராஷ்டிரா, டில்லி, ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் போலீசார் கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

