பா.ம.க., பிரமுகர் கொலை வழக்கு தகவல் தந்தால் ரூ.25 லட்சம் பரிசு
பா.ம.க., பிரமுகர் கொலை வழக்கு தகவல் தந்தால் ரூ.25 லட்சம் பரிசு
ADDED : மே 26, 2024 06:42 AM

சென்னை: 'பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம் கொலை குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால், 25 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும்' என, தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ., சார்பில், கோவையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். பா.ம.க., பிரமுகரான இவரை, 2019ல் மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த வழக்கு தொடர்பாக, 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனத்தை சேர்ந்த முகமது அலி ஜின்னா, 39, கும்பகோணம் மேலக் காவேரியை சேர்ந்த அப்துல் மஜீத், 42, வடக்குமாங்குடியை சேர்ந்த புர்ஹானுதீன், 33, திருவிடைமருதுரை சேர்ந்த ஷாஹுல் ஹமீத், 32, திருமங்கலக்குடியை சேர்ந்த நபீல் ஹாசன், 33, ஆகிய ஐந்து பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
அதன்படி, ஐந்து குற்றவாளிகளின் பெயர், வயது, புகைப்படம் அடங்கிய விபரங்களுடன் கூடிய சுவரொட்டிகளை, கோவையில் பல்வேறு இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த ஐந்து குற்றவாளிகள் குறித்த தகவல் தெரிந்தால், தேசிய புலனாய்வு முகமை, எண் 10, மில்லர்ஸ் சாலை, புரசைவாக்கம், சென்னை - 600 010 என்ற முகவரிக்கு தெரிவிக்கலாம்.
மேலும், 94999 45100, 99623 61122, 044 2661 5100 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். அதேபோல், info-che.nia@gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தகவல் தெரிவிக்கலாம்.
தகவல் அளிப்பவரின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படுவதுடன், ஒரு குற்றவாளிக்கு 5 லட்சம் ரூபாய் வீதம், ஐந்து குற்றவாளிகளுக்கும் சேர்த்து 25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் அச்சிடப்பட்டு உள்ளது.