ADDED : மே 17, 2024 05:43 AM

பொதுவாக புண்ணிய தலங்களில் சிவன், விஷ்ணு கோவில்கள் தனித்தனி இடங்களில் இருக்கும். ஒரே இடத்தில் இருப்பது அபூர்வம். இத்தகைய அபூர்வ கோவில் சிக்கமகளூரில் அமைந்துள்ளது.
சிக்கமகளூரில் ஒரே இடத்தில் சைவ, வைஷ்ணவ கோவில்கள் பக்தர்களை பரவசப்படுத்துகின்றன. சிக்கமகளூரின் மரலே கிராமத்தில் ஹொய்சாளர்கள் காலத்தில் கட்டப்பட்ட இரட்டை கோவில்கள் உள்ளன. ஒன்று சென்னகேசவர் கோவில்; மற்றொன்று சித்தேஸ்வரா கோவில்.
விஷ்ணுவின் அவதாரமான சென்னகேசவர் கோவில், 1130ம் ஆண்டில் கட்டப்பட்டது. இதனை ஹொய்சாளா மன்னர் விஷ்ணுவர்த்தனின் மந்திரி ராயண்ணா தன்டநாதா கட்டினார். சிவனின் அம்சமான சித்தேஸ்வரர் கோவில், ஹொய்சாளா மன்னர் நரசிம்மனால், 1147ல் கட்டப்பட்டதாக, வரலாறு கூறுகிறது.
இந்த இரண்டு கோவில்களும், ஒரே இடத்தில் இருப்பது சிறப்பான அம்சமாகும். சித்தேஸ்வரா கோவில் வட்ட வடிவமாக கட்டப்பட்டுள்ளது. கோவிலை சுற்றிலும் விநாயகர், சரஸ்வதி சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அஷ்ட திக்பாலகர்களால் சூழப்பட்ட நடராஜர் சிற்பமும் உள்ளது.
மரலே கிராமம் சிக்கமகளூரில் இருந்து 12 கி.மீ., தொலைவில் உள்ளது. சிக்கமகளூரு, பேலுார், ஹாசன் வழியாகவும் வரலாம். பேலுாரில் இருந்து 15 கி.மீ., தொலைவில் இரட்டை கோவில்கள் உள்ளன. காலை 6:30 மணி முதல் 9:30 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் 6:30 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும். 95384 90310 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
- நமது நிருபர் -

