ADDED : ஜூலை 15, 2024 04:36 AM
பெங்களூரு : நீண்ட ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் வருவாய் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது.
வருவாய் துறையை சேர்ந்த அதிகாரிகள் பலரும், ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் பணிபுரியும் அலுவலகங்களில், உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை விட, அந்த அதிகாரிகளின் பேச்சு தான் அதிகமாக செல்லுபடியாகிறது.
மேலும், அத்தகைய அதிகாரிகள் ஊழலில் மூழ்கி உள்ளனர். சில அதிகாரிகளுக்கு தர வேண்டியதை தராவிட்டால், எந்த பணியும் நடக்காது. அந்த அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளதை, வருவாய் அலுவலகங்களுக்கு செல்லும் மக்களுக்கு நன்றாக தெரியும்.
இது தொடர்பாக, உயர் அதிகாரிகளுக்கும், முதல்வர், அமைச்சர்களின் கவனத்துக்கும் தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
இந்நிலையில், நீண்ட ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதனால், அத்தகைய அதிகாரிகளின் பட்டியலை தயார் செய்து அனுப்பும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், வருவாய் துறை முதன்மை செயலர் ராஜேந்திர குமார் கட்டாரியா சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
பட்டியல் கைக்கு கிடைத்ததும், இடமாற்றம் செய்வதற்கான பணிகள் ஆரம்பமாகும் என்று வருவாய் துறை வட்டாரம் தெரிவிக்கின்றன.

