ADDED : ஜூலை 24, 2024 11:31 PM

சிக்கமகளூரு மாவட்டத்தில் பாபா புதன்கிரி மலையை போன்று, சுற்றுலாவுக்கு ஏற்ற இடம் ஜாரி நீர்வீழ்ச்சி.
சிக்கமகளூரு - பாபா புதன்கிரி சாலையில் அத்திஹுன்டியில், 'ஜாரி நீர்வீழ்ச்சி' உள்ளது. சிக்கமகளூரில் உள்ள பிரபலமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்று. நீர்வீழ்ச்சியின் அருகில் நின்று பார்க்கும்போது, மெல்லிய நீர் வடிந்து விழுவது போன்று தோன்றும். அதனால் 'மோர் நீர்வீழ்ச்சி' என்றும் அழைக்கின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகள் மற்றும் காபி தோட்டங்களுக்குள் அமைந்திருக்கும் இரண்டு அடுக்கு நீர்வீழ்ச்சியாகும்.
மலையில் உருவாகும் நீரூற்றுகளால், இந்த நீர்வீழ்ச்சி தோன்றி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி, 50 முதல் 70 மீட்டர் உயரத்தில் இருந்து, பாறைகளால் உருவான இயற்கை படி போன்ற அமைப்பில் இருந்து கீழே விழுகிறது.
கீழே குளம் போன்று தண்ணீர் தேங்கிச் செல்கிறது. சுற்றுலா பயணியர் இங்கு விளையாடி மகிழலாம். இதுவே நீங்கள் சாகசகாரர்களாக இருந்தால், 30 மீட்டர் உயரத்தில் உள்ள நீர்வீழ்ச்சியின் இரண்டாவது அடுக்குக்கு செல்லலாம்.
ஆனால், இங்கு செல்ல நீர்வீழ்ச்சியின் ஓரத்தில் பாதை இருந்தாலும், இது சேரும், சகதியுமாக காணப்படுவதால், மேலே செல்வது சற்று சிரமமாக இருக்கும்.
இந்த நீர்வீழ்ச்சியை காண, ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை சென்று பார்க்கலாம். காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நீர்வீழ்ச்சிக்குச் செல்லலாம். அனுமதி இலவசம்.
அடர்ந்த வனப்பகுதியில் இருந்து கொட்டும் ஜாரி நீர்வீழ்ச்சி.