ADDED : செப் 09, 2024 03:49 AM

கோட்டா: மேற்கு- மத்திய ரயில்வே, வட மேற்கு ரயில்வே மற்றும் வடக்கு ரயில்வே ஆகிய மூன்று மண்டலங்களின் லோகோ பைலட்டுகள் இடையே வந்தே பாரத் ரயிலை இயக்குவதில் கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
இந்த தகராறு காரணமாக உத்தர பிரதேசத்தின் இட்கா ரயில் நிலையத்தில், ராஜஸ்தானின் கோட்டா ரயில் கோட்டத்தின் லோகோ பைலட் சமீபத்தில் தாக்கப்பட்டார்; அவரது சட்டை கிழிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆக்ராவில் இருந்து ராஜஸ்தானின் உதய்பூருக்கு சமீபத்தில் சென்ற வந்தே பாரத் ரயில், கங்காபூர் ரயில் நிலையத்துக்கு வந்தது. ரயிலை ஆக்ரா கோட்டத்தைச் சேர்ந்த லோகோ பைலட் மற்றும் உதவியாளர்கள் இயக்கினர். அப்போது ரயில் நிலையத்தில் திரண்டு இருந்த கோட்டா கோட்டத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களை வெளியே தள்ளி சட்டையை கிழித்து அடித்தனர்.
ரயில்வே போலீசார் தடியடி நடத்தி ஊழியர்களை விரட்டி அடித்தனர். இது தொடர்பாக ரயில்வே ஊழியர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.