காதல் விவகாரத்தில் வாலிபரை தாக்கிய வழக்கில் திடீர் திருப்பம்
காதல் விவகாரத்தில் வாலிபரை தாக்கிய வழக்கில் திடீர் திருப்பம்
ADDED : மார் 22, 2024 06:55 AM
யாத்கிர்: சிறுமியை காதலித்ததாக, முஸ்லிம் வாலிபர் தாக்கப்பட்ட வழக்கில், திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டியதால் தாக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
யாத்கிர் டவுனில் வசிப்பவர் வாஹித், 22. இவரும், வேறு மதத்தை சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்தனர். இந்நிலையில் சிறுமியின் மதத்தை சேர்ந்த ஒன்பது பேர், கடந்த 19ம் தேதி வாஹித்தை பிடித்து தாக்கினர்.
இதுகுறித்து வாஹித் தந்தை அளித்த புகாரில் ஒன்பது பேர் மீதும், யாத்கிர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் வாஹித்தின் காதலியான சிறுமியின் பெற்றோர், யாத்கிர் டவுன் போலீசில் நேற்று அளித்த புகார்:
எங்கள் மகளும், வாஹித்தும் காதலித்தனர். எங்கள் மகளுடன், வாஹித் வலுக்கட்டாயமாக, 'உறவு' வைத்து உள்ளார்.
அதை மொபைல் போனில் வீடியோவும் எடுத்து உள்ளார். அந்த வீடியோவை காட்டி, மதம் மாற வேண்டும் என்று, எங்கள் மகளை மிரட்டி உள்ளார். அதற்கு அவர் மறுத்ததால், ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டினார்.
இதுகுறித்து எங்கள் சமூக வாலிபர்களிடம் தெரிவித்தோம். அவர்கள் வாஹித்தின் மொபைல் போனில் இருந்த, வீடியோவை அழித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், வாஹித் தாக்கப்பட்டார். ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய, அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறி இருந்தனர்.
போலீசார் விசாரித்த போது, வாஹித், காதலியை மிரட்டியது தெரிந்தது. இதனால் அவர் மீது, 'போக்சோ' வழக்குப் பதிவாகி உள்ளது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடுகின்றனர்.

