காதலியுடன் ஓட்டம் பிடித்த வாலிபர்; மின்கம்பத்தில் கட்டி வைத்து தாய்க்கு அடி
காதலியுடன் ஓட்டம் பிடித்த வாலிபர்; மின்கம்பத்தில் கட்டி வைத்து தாய்க்கு அடி
ADDED : மே 03, 2024 11:20 PM

ஹாவேரி : காதலியுடன் ஓட்டம் பிடித்த வாலிபரின் தாயை மின்கம்பத்தில் கட்டிவைத்து, பெண்ணின் உறவினர்கள் தாக்கினர்.
ஹாவேரி ராணிபென்னுார் அரேமல்லாபுரா கிராமத்தின் ஹனுமவ்வா, 50. இவரது மகன் மஞ்சுநாத், 25. இவர், பூஜா, 23, என்ற இளம்பெண்ணை காதலித்தார். காதலியின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கடந்த 28ம் தேதி, காதலர்கள் ஓட்டம் பிடித்தனர். மறுநாள் மஞ்சுநாத் வீட்டிற்கு சென்ற, பூஜாவின் குடும்பத்தினர், ஹனுமவ்வாவிடம் தகராறு செய்தனர்.
வீட்டில் இருந்து அவரை வெளியே இழுத்து வந்து, மின்கம்பத்தில் கட்டி வைத்துத் தாக்கிவிட்டு தப்பினர். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஹனுமவ்வா அளித்த புகாரில், பூஜாவின் உறவினர்களான சந்திரப்பா, தேவப்பா, கவிதேவய்யா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணை நடக்கிறது. 29ம் தேதி நடந்த சம்பவம், தாமதமாக நேற்று வெளியானது.
கடந்த டிசம்பர் மாதம் பெலகாவியின் வந்தமூரி கிராமத்தில், காதல் திருமணம் செய்த வாலிபரின் தாயை, பெண்ணின் குடும்பத்தினர் மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்ததுடன் நிர்வாண ஊர்வலம் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.