ADDED : ஜூன் 01, 2024 06:37 AM
நெலமங்களா: ரயிலில் இருக்கைக்கு ஏற்பட்ட தகராறில், வாலிபர் மீது கத்தியால் வெட்டிவிட்டு, மர்ம நபர் தப்பி சென்றார்.
ஹாசனை சேர்ந்தவர்கள் யோகேஷ், 35, கங்காதர், 34. நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் இருந்து ஹாசனுக்கு ரயிலில் சென்றனர். நெலமங்களா அருகே ரயில் சென்ற போது, கங்காதருக்கு மொபைல் போனில் அழைப்பு வந்தது.
டவர் சரியாக கிடைக்காததால்,2 ரயில் கழிப்பறை கதவு அருகில் நின்று போன் பேசினார். கங்காதர் அமர்ந்திருந்த இருக்கையை, யோகேஷ் பார்த்து கொண்டார். இந்நிலையில் கங்காதரின் இருக்கை மீது, ஒருவர் அமர்ந்தார். அந்த நபரிடம், இந்த இருக்கையில், எனது நண்பர் அமர்ந்திருந்தார் என்று, யோகேஷ் கூறினார்.
ஆனாலும் இருக்கையில் இருந்து எழுந்து செல்ல, அந்த நபர் மறுத்தார். இதனால் யோகேசுக்கும், அந்த நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, யோகேஷின் தோள் பட்டை, கையில் அந்த நபர் வெட்டினார்.
அதற்குள் நெலமங்களா ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தது. மெதுவாக சென்ற ரயிலில் இருந்து கீழே குதித்து, அந்த நபர் தப்பினார். வெட்டு காயம் அடைந்த யோகேஷ், நெலமங்களா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.