ADDED : ஜூலை 08, 2024 06:42 AM

பெங்களூரு: இரவு நேரத்தில் பணி முடிந்து செல்லும் போது நிலை தடுமாறி, மழைநீர் கால்வாயில் விழுந்து அடித்து செல்லப்பட்ட வாலிபரின் உடல், இரண்டு நாட்களுக்கு பின் மீட்கப்பட்டது.
பைட்ராயனபுராவை சேர்ந்தவர் ஹேமந்த் குமார், 27. உணவுகளை 'டெலிவரி' செய்யும் பணியாற்றி வருகிறார். ஜூலை 5ம் தேதி இரவு 10:30 மணிக்கு பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அன்றிரவு மழை பெய்து கொண்டிருந்தது.
மைசூரு சாலையில் உள்ள ஞானபாரதி மெட்ரோ ரயில் நிலையம் அருகே வரும் போது, சாலை தடுப்பில் மோதி, மழைநீர் கால்வாயில் விழுந்தார்.
அந்நேரத்தில் கால்வாயில் அதிகளவில் தண்ணீர் சென்று கொண்டிருந்ததால், அடித்து செல்லப்பட்டார். இதை பார்த்த சிலர், உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அன்றிரவு, நேற்று முன்தினம் தேடியும் கிடைக்கவில்லை.
நேற்று காலை இரண்டு கி.மீ., தொலைவில், மைசூரு சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில், வாலிபர் சடலத்தை தீயணைப்பு படையினர் மீட்டனர்.