ADDED : மே 01, 2024 08:11 AM
தலகட்டபுரா : மன உளைச்சல் காரணமாக 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பெங்களூரு, தலகட்டபுராவின் மனவர்தேகாவலில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சஞ்சித், 25. சில நாட்களாக மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த அவர், யாரிடமும் அதிகம் பேசாமல் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில், தான் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இவர் குதித்த இடத்தில் வாழை மரங்கள் இருந்ததால், அவற்றின் மீது விழுந்தார். இதனால், படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
சத்தம் கேட்டதை அடுத்து வெளியே வந்த மற்ற குடியிருப்புவாசிகள், சஞ்சித் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தற்போது சிகிச்சை பெற்று வரும் சஞ்சித் உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் கூறினர். தலகட்டபுரா போலீசார் விசாரிக்கின்றனர்.