மூவர் மர்மச்சாவு வழக்கில் திருப்பம் ஒருதலை காதலால் கொன்ற வாலிபர் கைது
மூவர் மர்மச்சாவு வழக்கில் திருப்பம் ஒருதலை காதலால் கொன்ற வாலிபர் கைது
ADDED : மே 30, 2024 06:34 AM

கொப்பால்: கொப்பாலில் தாய், மகனுடன் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், அவர்கள் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஒருதலை காதலால் கொலை செய்தது அம்பலமாகி உள்ளது.
கொப்பால் மாவட்டம், ஹொஸ்லிங்கபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 50. இவரது மகள் வசந்தா, 28, பேரன் சாய் தர்மதேஜ், 5. ஆந்திராவை சேர்ந்த கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தாயுடன் வசந்தா வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மூவரும் அவர்களின் வீட்டில் இறந்து கிடந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், விசாரணையை துவக்கினர். இறந்தவர்களின் உடலில் எந்த காயமும் இல்லை என்பதால், தற்கொலையாக இருக்குமென போலீசார் கருதினர்.
பிரேத பரிசோதனையில், அவர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் விசாரணை கோணத்தை போலீசார் மாற்றினர். இதில் அவர்கள் கொலைக்கான காரணம் தெரிய வந்தது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
'நியூ சிங்கப்பூர்' என்ற பொம்மை தயாரிக்கும் தொழிற்சாலையில் வசந்தா பணியாற்றி வந்தார். அதே ஆலையில் பணியாற்றி வந்த சகோதரர்கள் ஆரிப், ஆசிப் ஆகியோருக்கும் வசந்தாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.
ஆரிப்புக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர். மனைவியை விவாகரத்து செய்திருந்த ஆரிப்பும், வசந்தாவும் காதலித்தனர். ஆறு மாதங்களுக்கு முன் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். மனைவியின் வீட்டுக்கு ஆரிப் அவ்வப்போது வந்து செல்வாராம்.
ஆரிப் போலவே, ஆசிப்பும் வசந்தாவை காதலித்து வந்துள்ளார். தான் காதலித்தவரை, சகோதரர் திருமணம் செய்து கொண்டது, அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு, 27ம் தேதி மாலை 4:30 மணிக்கு வசந்தா வீட்டுக்கு ஆசிப் சென்றுள்ளார். அங்கிருந்த ராஜேஸ்வரி, சாய் தர்மதேஜ் ஆகியோரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
வெளியே சென்றிருந்த வசந்தா வருகைக்காக அவர் காத்திருந்தார். மாலை 5:30 மணிக்கு வசந்தா வீட்டுக்கு வந்தவுடன், அவரையும் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.