ADDED : ஏப் 13, 2024 12:58 AM
பாலக்காடு,கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தின் கோட்டேக்காடு ரயில் நிலையம் அருகே, வனப்பகுதியில் பெண் யானை ஒன்று அடிபட்டு கிடப்பதாக, கடந்த 10ம் தேதி, வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை மற்றும் கால்நடைத் துறை அதிகாரிகள், காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
எனினும் யானை படுத்த படுக்கையாகவே கிடக்கிறது. யானைக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என்றும், உள் காயங்கள் இருக்கலாம் என்றும் கால்நடை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று, வாளையார் வனச்சரக அலுவலர் கூறுகையில், 'யானை மீது ரயில் மோதி இருக்கலாம் என்ற சந்தேகத்தில், ரயில் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
'இதுகுறித்து விசாரித்து வருகிறோம். யானை மீது ரயில் மோதியதற்கான சில ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளோம். ஆனால், எந்த ரயில் மோதியது என்பது குறித்து உறுதியான தகவல் தெரியவில்லை' என்றார்.
சம்பவம் நடந்த இரு நாட்களுக்கு பின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

