சக்லேஸ்பூரில் அட்டகாசம் செய்த காட்டு யானை 'கரடி' பிடிபட்டது
சக்லேஸ்பூரில் அட்டகாசம் செய்த காட்டு யானை 'கரடி' பிடிபட்டது
ADDED : ஏப் 19, 2024 06:35 AM

ஹாசன்: சக்லேஸ்பூர், பேலுாரில் அட்டகாசம் செய்த காட்டு யானை 'கரடி' பிடிபட்டது.
ஹாசன் பேலுாரில் கடந்த ஜனவரி 4 ம் தேதி, காபி தோட்ட தொழிலாளி வசந்த் என்பவரை, காட்டு யானை மிதித்து கொன்றது.
அதற்கு மறுநாள் காபி தோட்டத்தில் வேலை செய்த, இரண்டு தொழிலாளர்கள், யானை தாக்குதலுக்கு ஆளாகினர்.
யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அந்த யானைக்கு கரடி என்று பெயர் சூட்டப்பட்டது. 'ஆப்பரேஷன் கரடி' என்ற பெயரில், யானையை பிடிக்கும் பணி நடந்தது.
ஆனால் யானை சக்லேஸ்பூருக்கு இடம் பெயர்ந்தது. அங்கும் காபி தோட்டத்தில் புகுந்து, அட்டகாசத்தில் ஈடுபட்டது. இந்நிலையில் பேலுார் கிராமங்களில், யானை மீண்டும் அட்டகாசம் செய்வது தெரிந்தது. இதையடுத்து யானையை பிடிக்க, கும்கிகள் அபிமன்யு, பீமா, ஹர்ஷா, பிரசாந்த், சுக்ரீவா, தனஞ்ஜெய், அஸ்வதம்மா, மகேந்திரா வரவழைக்கப்பட்டன.
கும்கிகள் உதவியுடன் காட்டு யானையை தேடும் பணி, நேற்று காலை துவங்கியது. பேலுார் அருகே வட்டேஹள்ளி கிராமத்தில் உள்ள, காபி தோட்டத்தில் காட்டு யானை நின்றது.
அங்கு சென்ற வனத்துறை கால்நடை மருத்துவர், துப்பாக்கி மூலம் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினார். அதன்பின்னர் பிளிறியபடி சிறிது துாரம் ஓடிய யானை, காபி தோட்டத்திற்குள் மயக்கம் போட்டு விழுந்தது.
பின்னர் யானையின் கால்களை வனத்துறையினர் கயிற்றால் கட்டினர். மயக்கம் தெளிந்ததும், கால்களில் கட்டப்பட்டு இருந்த கயிற்றை அறுக்க யானை முயற்சித்தது. ஆனால் கும்கிகள், யானையை ஆசுவாசப்படுத்தின. அதன்பின் பிடிபட்ட யானை, லாரியில் ஏற்றப்பட்டு, துபாரேயில் உள்ள யானைகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

