ரூ.300 கோடி சொத்தை அபகரிக்க திட்டம்; மாமனாரை கார் ஏற்றி கொன்ற பெண் அதிகாரி
ரூ.300 கோடி சொத்தை அபகரிக்க திட்டம்; மாமனாரை கார் ஏற்றி கொன்ற பெண் அதிகாரி
UPDATED : ஜூன் 13, 2024 04:47 AM
ADDED : ஜூன் 13, 2024 12:57 AM

நாக்பூர், மஹாராஷ்டிராவில் மாமனாருக்கு சொந்தமான 300 கோடி ரூபாய் சொத்தை அபகரிக்க முயன்ற அரசு பெண் அதிகாரி, கூலிப்படையை ஏவி மாமனாரை கார் ஏற்றி கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
மஹாராஷ்டிராவின் நாக்பூர் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தம் புட்டேவர், 82, இவருக்கு 300 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து உள்ளது. இவரது மகன் மனீஷ், டாக்டராக பணியாற்றுகிறார். மனீஷின் மனைவி அர்ச்சனா மனீஷ் புட்டேவர், 53. இவர் நாக்பூர் நகர திட்டமிடல் துறை உதவி இயக்குனராக உள்ளார்.
கடந்த மாதம் 22ம் தேதி நாக்பூர் பாலாஜி நகர் பகுதிக்கு சென்ற புருஷோத்தம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் புருஷோத்தம் இறந்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணை மற்றும் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, புருஷோத்தம் விபத்து ஏற்பட்டு உயிரிழக்கவில்லை என்பதும் கூலிப்படையை ஏவி மருமகளே மாமனார் புருஷோத்தமை கொலை செய்ததும் தெரிய வந்தது.
மாமனாரை கொலை செய்ததில் தொடர்புடைய பெண் அதிகாரி அர்ச்சனாவை போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரி கூறியதாவது:
மாமனாரின் 300 கோடி ரூபாய் சொத்தை அபகரிக்க திட்டமிட்ட அர்ச்சனா இதற்காக, 1 கோடி ரூபாய் கொடுத்து கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளார்.
கணவரின் கார் டிரைவர் பாக்டே மற்றும் நீரஜ் நிம்ஜே, சச்சின் தர்மிக் ஆகியோர் இந்த பணத்தை கொண்டு பழைய கார் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளனர். அதை பயன்படுத்தி புருஷோத்தமை கார் ஏற்றி கொலை செய்துள்ளனர்.
மேலும் இந்த கொலையை தற்செயலாக நடந்த விபத்து போல் காட்ட முயன்றதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அர்ச்சனாவிடம் விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.