ADDED : ஆக 03, 2024 11:18 PM

இன்றைய காலத்தில், அவரவர் வீடுகளை துாய்மையாக வைத்துக் கொள்வதையே, பெரிய வேலையாக கருதுகின்றனர். இவர்களுக்கு நடுவில், ஊரை சுத்தம் செய்வதை கடமையாக நினைக்கும் இளைஞர், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.
பணம், பொருள் கொடுப்பது மட்டுமே சேவை அல்ல. உடல் உழைப்பையும் கொடுக்கலாம் என்பதற்கு, இவர் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார். தன் ஓய்வு நேரத்தை, மற்றவருக்காக செலவிடுகிறார்.
மைசூரு நகரின் உதயபுராவில் வசிப்பவர் அக்பர், 28. இவர் சொந்தமாக 'ஆட்டோமொபைல் ஷாப்' வைத்துள்ளார். மதியம் ஓய்வு நேரத்தில், துடைப்பம், கூடையுடன் சுற்றி வருகிறார்.
பள்ளி, கல்லுாரி வளாகங்கள், ரோடு ஓரங்களில் குப்பை குவிந்திருந்தால், அதை அள்ளி சுத்தம் செய்கிறார். இதற்காக இவர் யாரிடமும் உதவி கேட்பதில்லை. தன் சொந்த பணத்தை செலவிட்டு, சுத்தம் செய்கிறார்.
அது மட்டுமின்றி, குப்பை அள்ள வரும் துப்புரவு தொழிலாளர்களுக்கும் உதவுகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக, இந்த சேவையில் அக்பர் ஈடுபடுகிறார். குப்பை போடும் இடங்களில் குப்பையை அள்ளி சுத்தம் செய்துவிட்டு, அந்த இடங்களில் பூச்செடிகள் நடுகிறார்.
எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல், மைசூரு நகர்ப்பகுதிகளில், சேவை செய்து வரும் அக்பரை, பொதுமக்கள் பாராட்டுகின்றனர்
- நமது நிருபர் -.