பத்த வச்சிட்டியே பரட்ட... ஆம் ஆத்மி கொண்டாட்டத்தால் கெஜ்ரிவாலுக்கு வந்த சிக்கல்!
பத்த வச்சிட்டியே பரட்ட... ஆம் ஆத்மி கொண்டாட்டத்தால் கெஜ்ரிவாலுக்கு வந்த சிக்கல்!
ADDED : செப் 14, 2024 07:06 PM

புதுடில்லி: சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த முதல்வர் கெஜ்ரிவாலை வரவேற்கும் விதமாக, அவரது வீட்டின் முன் ஆம்ஆத்மி கட்சியினர் பட்டாசு வெடித்ததால் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கைது
டில்லி அரசின் புதிய மதுபான கொள்கையில் நடந்த முறைகேட்டில் தொடர்பிருப்பதாகக் கூறி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதே வழக்கில் கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி சி.பி.ஐ, வழக்குப்பதிவு செய்து திகார் சிறையில் வைத்தே கெஜ்ரிவாலை கைது செய்தது.
ஜாமின்
இரு வழக்குகளும் டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், கெஜ்ரிவாலின் மனுவை ஏற்று, அவருக்கு ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ஜாமினில் வெளியே செல்லும் கெஜ்ரிவால் வழக்கு தொடர்பாக பொதுவெளியில் பேசக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தனர். 5 மாதங்களுக்குப் பிறகு வெளியே வந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது கட்சியினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்றனர்.
வழக்குப்பதிவு
இந்த நிலையில், தடையை மீறி முதல்வர் கெஜ்ரிவாலின் வீட்டுக்கு வெளியே பட்டாசு வெடித்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால், 'சட்டத்தை மீற மாட்டேன்' என்று உத்தரவாதம் கொடுத்து ஜாமினில் வெளியே வந்துள்ள கெஜ்ரிவாலுக்கு சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. பட்டாசு வெடித்து சட்டத்தை மீறியதாக, போலீசார் புகார் செய்தால், அவரது ஜாமினுக்கும் சிக்கல் என்கின்றனர், வக்கீல்கள்.
எதிர்வரும் குளிர்காலத்தையொட்டி, காற்று மாசுபாட்டை தடுப்பதற்காக, பட்டாசுகளை தயாரிக்கவும், விற்கவும் டில்லி அரசு கடந்த திங்கட்கிழமை தடை விதித்து உத்தரவை பிறப்பித்திருந்தது. தற்போது, அந்தத் தடையை மீறியதாக, போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

