கெஜ்ரிவால் உதவியாளரால் ஆபத்து கோர்ட்டில் கதறிய ஆம் ஆத்மி எம்.பி.,
கெஜ்ரிவால் உதவியாளரால் ஆபத்து கோர்ட்டில் கதறிய ஆம் ஆத்மி எம்.பி.,
ADDED : மே 28, 2024 01:21 AM

புதுடில்லி, “டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரால், எனக்கும், என் குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது. அவருக்கு ஜாமின் அளிக்க வேண்டாம்,” என, ஆம் ஆத்மி எம்.பி., சுவாதி மாலிவால் கதறி அழுதார். இதைஅடுத்து அவரது ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டில்லி மதுபான கொள்கை தொடர்புடைய பண மோசடி வழக்கில், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், மார்ச் 21ல் கைது செய்யப்பட்டார்.
குற்றச்சாட்டு
திஹார் சிறையில் ஒரு மாதத்துக்கும் மேல் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு, ஜூன் 1 வரை இடைக்கால ஜாமின் வழங்கி, கடந்த 10ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜாமினில் வந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க, அவரது வீட்டுக்கு, அவரது கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யும், டில்லி பெண்கள் கமிஷன் முன்னாள் தலைவியுமான சுவாதி மாலிவால், கடந்த 13ல் சென்றார்.
அவரிடம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்கு பின், தன்னிடம் பிபவ் குமார் தவறாக நடந்து கொண்டதாகவும், தன்னை தாக்கியதாகவும், டில்லி போலீசில் ஆம் ஆத்மி எம்.பி., சுவாதி மாலிவால் புகார் அளித்தார்.
இதன்படி, பிபவ் குமாரை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க பா.ஜ., இந்த சதித்திட்டத்தை தீட்டியுள்ளதாகவும், அவருடன் சுவாதி மாலிவால் கைகோர்த்துள்ளதாகவும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது.
இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமின் கோரி, டில்லி நீதிமன்றத்தில் பிபவ் குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது, நேற்று விசாரணை நடந்தது.
அப்போது பிபவ் குமார் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், 'சம்பவம் நடந்த மூன்று நாட்கள் கழித்து, போலீசில் சுவாதி மாலிவால் புகார் அளித்துள்ளார். டில்லி பெண்கள் கமிஷன் தலைவியாக பதவி வகித்துள்ள அவருக்கு, தன் உரிமைகள் என்னவென்று நன்றாக தெரியும்.
'அப்படியிருந்தும், அவர் உடனே புகார் அளிக்காதது ஏன்? மூன்று நாட்கள் அவகாசம் எடுத்துக் கொண்டு கதையை உருவாக்கி அவர் புகார் அளித்துள்ளார். முதல்வர் வீட்டில் அத்துமீறி நுழைந்தது அவர் தான். இது குறித்து அவரிடம் தான் விசாரிக்க வேண்டும்' என்றார்.
இதற்கு பதிலளித்த டில்லி போலீசார் தரப்பு வழக்கறிஞர், 'இந்த வழக்கில் எந்த உள்நோக்கமும் இல்லை. சுவாதி மாலிவாலை பெண் சிங்கம் என, கெஜ்ரிவாலே அழைத்துள்ளார். அவர் ஏன் துாண்டுதலின்படி இப்படி புகார் கொடுக்க வேண்டும்.
'ஒரு பெண்ணின் சட்டை பட்டன்கள் கிழியும் அளவுக்கு காட்டுமிராண்டி தனமாக பிபவ் குமார் தாக்கி உள்ளார். அவர் ஒன்றும் உத்தமர் அல்ல. ஏற்கனவே அரசுப் பணியில் இருந்து 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டவர் தானே அவர்' என்றார்.
சாதாரண மனிதர் அல்ல
இந்த விசாரணையின் போது நீதிமன்றத்தில் இருந்த சுவாதி மாலிவால் கூறுகையில், “நான் மோசமாக தாக்கப்பட்டேன். என்னை ஆம் ஆத்மி தலைவர்கள் பா.ஜ., ஏஜென்ட் எனக் கூறுகின்றனர்.
''பிபவ் குமார் வெளியே வந்தால், எனக்கும், என் குடும்பத்தினரின் உயிருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும்.
“முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் சுற்றித் திரிகிறார். ஆம் ஆத்மியின் நிர்வாகிகள் அனைவரும் எனக்கு எதிராக திருப்பி விடப்பட்டுள்ளனர். பிபவ் குமார் சாதாரண மனிதர் அல்ல.
''அமைச்சர்களுக்குக் கூட கிடைக்காத வசதிகளை அவர் பெற்றுள்ளார். அவருக்கு ஜாமின் அளிக்க வேண்டாம்,” என, தழுதழுத்த குரலில் அவர் கூறினார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட பெருநகர மாஜிஸ்திரேட் கவுரவ் கோயல், பிபவ் குமாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.